’முதல்வர்’ கனவை கைவிட்ட மூன்று பேர் – யாரெல்லாம் தெரியுமா?

 

’முதல்வர்’ கனவை கைவிட்ட மூன்று பேர் – யாரெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் கட்சி தொடங்கும் ஒவ்வொருவரும் முதலமைச்சராக வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். பலரின் கனவு பதவி அது. தமிழ்நாட்டில் முதல்வர் கனவோடு பலர் கட்சி ஆரம்பித்து முடியாமல் போனவர்களின் லிஸ்ட் ரொம்ப பெரியது. அதை இப்போது பட்டியலிட முடியாது. இப்போது களத்தில் இருப்பவர்களில் யார் யாரெல்லாம் முதல்வர் கனவை கனவுதான் என்று ஒத்துக்கொண்டு ஓரமாக வைத்திருக்கிறார்கள் (குறைந்த பட்சம் இந்தத் தேர்தலில்)

’முதல்வர்’ கனவை கைவிட்ட மூன்று பேர் – யாரெல்லாம் தெரியுமா?

வைகோ:

திமுகவிலிருந்து நீக்கப்பட்டதும் வைகோ, 1994 ஆம் ஆண்டு மே 6-ம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தார். அப்போது அவருடன் திமுகவிலிருந்து 9 மாவட்ட செயலாளர்கள் கட்சியிலிருந்து விலகி வைகோவோடு கரம் கோர்த்தனர். இரண்டாம் எம்ஜிஆர் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டார்.

அடுத்த முதல்வர் என்று அவருக்கு போஸ்டர், சுவர் எழுத்து என அதகளமானது. ஆனால், அவர் திமுக, அதிமுகவோடு மாறி மாறி கூட்டணி வைத்து தனது முதல்வர் கனவை தானே தகர்த்தார். இறுதியில் தமிழருவி மணியன்கூட வைகோ ரொம்ப நல்லவர். அவர் முதல்வராக வேண்டும் என்றெல்லாம் சொல்லி வந்தார். இப்போதைய நிலையில் வைகோ தனது அரசியல் நிலைபாடாக மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவது என்று அமைத்துக்கொண்டு விட்டார். அதற்கு பலனாக மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரப்பட்டது.

’முதல்வர்’ கனவை கைவிட்ட மூன்று பேர் – யாரெல்லாம் தெரியுமா?

விஜயகாந்த்:

கறுப்பு எம்.ஜி.ஆர் என்று வர்ணிக்கப்பட்டவர் விஜயகாந்த். இவர் 10 சதவிகித வாக்குகளைப் பெற்றதும் தமிழக அரசியல் களமே மாறுபட்டது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு கட்சி வந்துவிட்டதாகப் பேசப்பட்டது. விஜயகாந்தும் உற்சாகமாக தமிழகத்தை வலம் வந்தார்.

2011 -ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததே தேமுதிகவின் முதல் சறுக்கல். விஜயகாந்தின் முதல் கனவுக்கு முதல் வேட்டு அதுதான். 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வென்றதோடு மட்டுமல்லாது, எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார் விஜயகாந்த். ஆனால், அதன்பின் கட்சிக்கு தேய்பிறைதான். அவரின் உடல்நிலை சரியில்லாமல் போகவே நிலைமை இன்னும் சிக்கலானது.

2016 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி எனும் பெயரில் விஜயகாந்த் மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்டார். ஆனால், அக்கூட்டணி ஒரு தொகுதி கூட வெல்ல வில்லை. அத்தோடு முதல்வர் கனவிலிருந்து ரிட்டயர்மெண்ட் வாங்கிக்கொண்டார் விஜயகாந்த். சென்ற பாராளுமன்ற தேர்தல் தொடங்கி இப்போது வரை அதிமுகவோடு பயணித்து கட்சியை நகர்த்திக்கொண்டிருக்கிறார் விஜயகாந்த்.

’முதல்வர்’ கனவை கைவிட்ட மூன்று பேர் – யாரெல்லாம் தெரியுமா?

அன்புமணி ராமதாஸ்:

தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் கட்சிப் பொறுப்புக்கோ, அரசியல் பதவிக்கோ வரமாட்டார்கள் என பாமக தலைவர் ராமதாஸ் கூறியிருந்தாலும், அவரின் மகன் அன்புமணி ராமதாஸ் கட்சியின் முக்கிய பொறுப்பான இளைஞரணி வந்துவிட்டார். தொண்டர்களின் விருப்பம் என ரெடிமேட் பதிலைச் சொன்னார்கள்.

அதிமுக – திமுக இரு கட்சிகளோடு மாறி மாறி பயணித்து வந்தாலும், 2016 -ம் சட்டமன்ற தேர்தலில் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி எனும் டேக் லைனோடு பாமக தனித்து தேர்தலைச் சந்தித்தது. அன்புமணியும் உற்சாகமாக தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

அந்தத் தேர்தலில் 5.3 சதவிகித வாக்குகள் பெற்றாலும் ஒரு தொகுதியைக் கூட பாமகவால் வெல்ல முடியவில்லை. 1996 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ரஜினி அலை வீசியபோதே பாமக 116 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளை வென்றது. ஆனால், 2016 -ல் ஒரு தொகுதியில்கூட வெற்றி சாத்தியமில்லாமல் போய்விட்டது.

’முதல்வர்’ கனவை கைவிட்ட மூன்று பேர் – யாரெல்லாம் தெரியுமா?

2019 ஆம் ஆண்டு அதிமுக, பாஜக கூட்டணியில் ஐக்கியமாகி விட்டனர். வரும் சட்டமன்றத்திலும் இது நீடிக்கும் என்றே தெரிகிறது. அதனால், அன்புமணி முதல்வர் எனும் கோரிக்கை மீண்டும் இந்தத் தேர்தலில் எழ வாய்ப்பில்லை.

இவர்கள் தவிர சீமான், கமல்ஹாசன் இதுவரை கூட்டணி இல்லாது தேர்தலைச் சந்தித்து முதல்வர் பதவிக்கான பந்தயத்தில் இருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு அந்த எண்ணம் இருந்தாலும் பெருவாரியான வாக்குகள் பெறக்கூடியவர்கள் எனும் அடிப்படையில் இவர்கள் குறித்து இக்கட்டுரையில் அலசப்பட்டது.