மருத்துவமனையில் தவறவிட்ட தாலிசெயினை மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்

 

மருத்துவமனையில் தவறவிட்ட தாலிசெயினை மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்

தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தவறவிட்ட 5 சவரன் தங்க தாலி செயினை சிசிடிவி கேமரா பதிவு உதவியுடன் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த சோனகன்விளை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி இன்பமணி. இவர் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி அன்று உடல்நலக் குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை சென்றுள்ளார். ஸ்கேன் செய்ய சென்றபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி செயின் எதிர்பாராத விதமாக தவற விட்டார். பல்வேறு இடங்களில் தேடியும் நகை கிடைக்காததால் அவரது மகன் சம்பத்குமார், இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மருத்துவமனையில் தவறவிட்ட தாலிசெயினை மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், மர்மநபர் ஒருவர் தரையில் கிடந்த செயினை எடுத்துச்சென்றது தெரியவந்தது. சிசிடிவி பதிவின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நகையை எடுத்த நபர் தூத்துக்குடி கீழ் தட்டாப்பாறை கிராமத்தை சேர்ந்த ஊர்காவலன் என்பது தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்து நகையை மீட்டனர். தொடர்ந்து, இன்று தென்பாகம் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட இன்ப மணியிடம், மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் நேரில் தங்க செயினை ஒப்படைத்தார். மேலும், துரிதமாக செயல்பட்டு நகையை மீட்ட காவலர்களுக்கு, அவர் பாராட்டுக்களை தெரிவித்தார்.