இரவு ஊரடங்கால் உற்சாகமான திருடர்கள்… குஜராத்தில் கடைகளை உடைத்து பல லட்சம் பொருட்கள் கொள்ளை

 

இரவு ஊரடங்கால் உற்சாகமான திருடர்கள்… குஜராத்தில் கடைகளை உடைத்து பல லட்சம் பொருட்கள் கொள்ளை

குஜராத்தில் அமலில் உள்ள இரவு ஊரடங்கை பயன்படுத்தி, கடைகளை உடைத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்டவை தங்களது மாநிலங்களில் சில மாவட்டங்களில் இரவு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

இரவு ஊரடங்கால் உற்சாகமான திருடர்கள்… குஜராத்தில் கடைகளை உடைத்து பல லட்சம் பொருட்கள் கொள்ளை
கொள்ளை சம்பவம் (கோப்புபடம்)

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இரவு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அந்நகரில் இரவு நேரத்தில் கடைகள் திறந்து இருக்காது மற்றும் மக்களும் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்து விடுவார்கள். அதேசமயம் இந்த இரவு ஊரடங்கு திருடர்களுக்கு மிகவும் வசதியாகி விட்டது. அகமதாபாத்தின் நரோலில் ஒரு தொழில்துறை வளாகம் உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு 10 முதல் 12 பேர் கொண்ட திருட்டு கும்பல் ஒன்று அந்த தொழில்துறை வளாகத்தில் அமைந்துள்ள 15 கடைகளை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

இரவு ஊரடங்கால் உற்சாகமான திருடர்கள்… குஜராத்தில் கடைகளை உடைத்து பல லட்சம் பொருட்கள் கொள்ளை
அகமதாபாத்

அடுத்த நாள் காலை 8 மணி அளவில் வளாகத்துக்கு வந்த வர்த்தகர்கள் கடைகளில் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார் வளாகத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளின் உதவியுடன் சந்தேக நபர்களை அடையாளம் காண முயற்சி செய்து வருகின்றனர். திருட்டு கும்பல் கடைகளில் கொள்ளையடிக்கும் வீடியோ பதிவில் அந்த வளாக காவலாளி தெரிந்ததால் இந்த திருட்டில் அவருக்கும் தொடர்பு இருக்கும் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.