மாற்று சமூகம்… காதலுக்கு எதிர்ப்பு… ஊரடங்கால் தவிப்பு… அரசியல் கட்சி பிரமுகரை மணந்த ஆசிரியை!

 

மாற்று சமூகம்… காதலுக்கு எதிர்ப்பு… ஊரடங்கால் தவிப்பு… அரசியல் கட்சி பிரமுகரை மணந்த ஆசிரியை!

மாற்ற சமூகத்தை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகரை அரசு பள்ளி ஆசிரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் பாதுகாப்பு கேட்டு சேலம் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சர்மிளா. எம்ஏபிஎட் படித்துள்ள இவர், சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த முரளி என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மாற்று சமூகத்தை சேர்ந்த இவர்களது காதலுக்கு சர்மிளாவின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். முரளி கட்சி ஒன்றில் மாணவரணி செயலாளராக இருந்து வருகிறார். இருந்தாலும் பள்ளி செல்லும்போதும் வரும் போது சர்மிளா காதலனை சந்தித்து காதலை வளர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு இவர்களின் சந்திப்புக்கு தடையாக இருந்து வந்துள்ளது. வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் இருந்தார் சர்மிளா. இதனால் காதலனை சந்தித்து முடியாமல் தவித்து வந்துள்ளார் . இதனால் செல்போன் மூலம் காதலனிடம் பேசி வந்துள்ளார். இதனிடையே, ஊரடங்கு காலத்தை பயன்படுத்திக் கொண்ட தந்தை, சர்மிளாவுக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளார். இது சர்மிளாவுக்கு தெரியவந்தது. இதையடுத்து, ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதோடு, இ-பாஸ் தளர்வும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தனது சம்பளத்தில் வாங்கி வைத்திருந்த 50 பவுன் நகைகளை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார் சர்மிளா. காதலன் முரளியை வரவழைத்து சர்மிளா, அன்னதானப்பட்டியில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் பாதுகாப்பு கேட்டு சேலம் காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள், மனு அளித்துவிட்டு சென்றனர். கழுத்து, கைகளில் நகைகளுடன் வந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

இதனிடையே ப்ரியா என்ற பட்டதாரி பெண், தனது காதலன் ராமதாஸை திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்தார். இ-பாஸ் தளர்வால் பல காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு காவல்நிலையத்துக்கு படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர்.