இரவில் கோயிலில் புகுந்த கொள்ளையன்… 5 ஆயிரத்துக்கு ஐம்பொன் சிலை விற்பனை… சிக்கிய 3 பேர்

 

இரவில் கோயிலில் புகுந்த கொள்ளையன்… 5 ஆயிரத்துக்கு ஐம்பொன் சிலை விற்பனை… சிக்கிய 3 பேர்

மதுரையில் உள்ள கோயிலில் கொள்ளையடித்த ஐம்பொன் சிலைகளை 5 ஆயிரத்துக்கு விற்பனை செய்த கொள்ளையன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொரோனா காலத்தை பயன்படுத்தி கொள்ளை சம்பவம் அதிகரித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வசித்த மக்கள், கொரோனா அச்சத்தால் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். கோயில்களுக்கும் பக்தர்கள் வருவதில்லை. இதனை பயன்படுத்தி கோயில் உண்டியல், சிலைகளை கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

மதுரை ஆதிமூலம் பிள்ளை அக்ரகாரம் பகுதியில் பேச்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்றிரவு புகுந்த கொள்ளையன் முதலில் அங்கிருந்த சிசிடிவி கேமராவை உடைத்துள்ளான். இதையடுத்து, மின்சாரத்தை துண்டித்த கொள்ளையன், பின்னர் ஐம்பொன் சிலைகளான பொன்னர், சங்கர், அய்யனார், விநாயகர் சிலைகளை எடுத்ததோடு, 35 கிலோ எடை கொண்ட விளக்கையும் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

வழக்கம்போல் ஊழியர்கள் இன்று காலை கோயிலை திறந்துள்ளார்கள். அப்போது, சிலைகள் இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து திலகர் திடல் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, ஐம்பொன் சிலைகளை திருடிய செல்லூரை சேர்ந்த ஜெயராமனை கைது செய்தனர். அவரிடம் இருந்து சிலைகளை பறிமுதல் செய்தனர். 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து சிலைகளை வாங்கிய அனுப்பானடியைசேர்ந்த முகமது முஸ்தபா, செபஸ்தியான் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.