மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்… எச்சரித்த போலீஸ்… காவல் நிலையம் முன் கொல்லப்பட்ட 2வது மனைவி!- கணவன் வெறிச் செயல்

 

மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்… எச்சரித்த போலீஸ்… காவல் நிலையம் முன் கொல்லப்பட்ட 2வது மனைவி!- கணவன் வெறிச் செயல்

மகளுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த கணவன் மீது காவல்துறையினரிடம் புகார் அளித்ததால் ஆத்திரம் அடைந்த கணவன், 2வது மனைவியை காவல் நிலையம் முன்பே குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ளது நாட்டார்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்த முருகன் (46) என்பவர், பாவூர்சத்திரம் ரயில்வே கேட் பகுதியில் பழக்கடை வைத்துள்ளார். இவருக்கு மனைவியும், இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் திரிச்சுழியை சேர்ந்த சித்ராவுடன் (35) முருகனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. வியாபாரம் சம்பந்தமாக இருவரும் அடிக்கடி சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில், ஏற்கெனவே இரண்டு திருமணம் செய்திருந்த சித்ராவை திருமணம் செய்து கொண்டார் முருகன். சித்ராவுக்கு மகனும், மகளும் இருக்கின்றன. இந்த குழந்தைகளோடு சித்ராவை முதல் மனைவி வசிக்கும் பாவூர்சத்திரம் அழைத்து வந்து வாழ்ந்து வந்துள்ளார்.

முதல் மனைவிக்கு தெரியாமலேயே சித்ராவுடன் காலத்தை கழித்து வந்துள்ளார் முருகன். சில நேரங்களில் முதல் மனைவியின் வீட்டிற்கு செல்லாமல் சித்ரா வீட்டிலேயே தங்கியுள்ளார் முருகன். வீட்டிற்கு வராதது குறித்து முதல் மனைவி முருகனிடம் கேட்டுள்ளார். வியாபாரம் சம்பந்தமாக அங்கே தங்கிவிட்டதாக சமாளித்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில், ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல்நிலையில் சித்ரா அதிர்ச்சி புகார் ஒன்றை கொடுத்தார். அதில், எனது மகளுக்கு கணவர் முருகன் பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், முருகனையும், சித்ரா மற்றும் அவரது மகளையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இதையடுத்து, மூன்று பேரும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். பல மணி நேர விசாரணைக்கு பிறகு முருகனை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். இதையடுத்து, காவல் நிலையத்தில் இருந்து மகளுடன் வெளியே வந்த சித்ராவை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார் முருகன். பின்னர் தான் கொண்டு வந்த பைக்கில் முருகன் அங்கிருந்து தப்பிச் சென்றார். காவல் நிலையம் முன்பு ரத்த வெள்ளத்தில் கிடந்த சித்ராவை காவல்துறையினர் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், போகும் வழியிலேயே சித்ரா உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஆலங்குளம் காவல்துறையினர், தலைமறைவாக உள்ள முருகனை தேடி வருகின்றனர்.

காவல் நிலையம் முன்பு பெண் ஒருவர் கணவனால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆலங்குளம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.