வெளிமாநில தொழிலாளர்களுக்கு அரசு உதவாது, பணிபுரியும் நிறுவனங்களே உதவ வேண்டும்- முதலமைச்சர் பழனிசாமி

 

வெளிமாநில தொழிலாளர்களுக்கு அரசு உதவாது, பணிபுரியும் நிறுவனங்களே உதவ வேண்டும்- முதலமைச்சர் பழனிசாமி

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கம் நடைமுறையில் உள்ளது. சொந்த மாநிலங்களிலிருந்து பிழைப்புக்காக வேறு மாநிலங்களில் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தற்போது இந்த முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கோரோனா வைரஸ் மற்றும் முடக்கத்தால் நிறுவனங்கள் மூடப்பட்டதால் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது அன்றாட வருவாய் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். மேலும் கைகளில் பணம் இல்லாததால் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி விட்டனர்.

Edappadi palanisamy

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிட வசதியை அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களே ஏற்படுத்தித் தர வேண்டும். மீன் கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் காய்கறி கடைகளில் போதிய சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிபடுத்த வேண்டும். சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அதேபோல தனியார் மருத்துவமனைகளில் இப்படிப்பட்ட நோயாளிகள் இருந்தால் சுகாதாரத் துறைக்கு அறிவிக்கவேண்டும். வெளிமாநில தொழிலாளர்களை மீட்க ஏற்கனவே மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்ட 9 குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில் வெளிமாநில நபர்கள் மாணவர்களை ஒருங்கிணைக்க மேலும் இரு குழுக்கள் கொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.