நிவாரண பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

 

நிவாரண பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

பொதுமக்கள் உணர்வுகளை புரிந்துகொண்டு கஜா புயல் நிவாரண பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

சென்னை: பொதுமக்கள் உணர்வுகளை புரிந்துகொண்டு கஜா புயல் நிவாரண பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

கஜா புயல் டெல்டா மாவட்டங்களை சூறையாடி சென்றிருக்கும் நிலையில், நிவாரண பணிகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசுகையில்,  சாலை மறியலில் ஈடுபட்டால்தான் பிரச்னைகள் அரசின் கவனத்திற்கு செல்லும் என்ற எண்ணம் வேண்டாம். நிவாரண முகாம்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பேரிடர் குறித்து எதுவும் தெரியாமல் வீட்டில் இருந்து கருத்து கூறினால் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

பொதுமக்கள் உணர்வுகளை புரிந்துகொண்டு நிவாரண பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம். மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சமூக விரோதிகள் யார் என்பதை கண்டறிந்து பொதுமக்கள் அப்புறப்படுத்த வேண்டும். சாமானிய மக்களை சிலர் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர். சமூக ஆர்வலர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் சமூக அக்கறையில்லாமல் பேசி வருகின்றனர்.  களத்தில் இருக்கும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும்.மறுபடியும் மழை பெய்யும் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.