இறுதியானது திமுக-காங்கிரஸ் கூட்டணி; காங்.,-க்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!!

 

இறுதியானது திமுக-காங்கிரஸ் கூட்டணி; காங்.,-க்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான திமுக – காங்கிரஸ் கூட்டணி இறுதியாகி, தொகுதி பங்கீடுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான திமுக – காங்கிரஸ் கூட்டணி இறுதியாகி, தொகுதி பங்கீடுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை தொடங்கி விட்டன. கூட்டணி தொடர்பான அரசியல் கட்சிகளின் அடுத்தடுத்த நகர்வுகள் கடும் எதிர்பார்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளின் தலைமையின் கீழ் கூட்டணி அமைகிறது. தங்களது தலைமையின் கீழ் பலமான கூட்டணியை அமைக்க இரு கட்சிகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே அதிமுக-பாமக-பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டணியில், பாமக-வுக்கு 7 தொகுதிகளும், பாஜக-வுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அனைவரது பார்வையும் திமுக – காங்கிரஸ் கூட்டணி பக்கம் திரும்பியது. கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களில் வென்றது. 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வெறும் 8 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது திமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. திமுக ஆட்சி அமைக்க முடியாமல் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்ததற்கு காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதே காரணம் எனவும் கூறப்பட்டு வந்தது.

எனினும், திமுக காங்கிரஸ் உறவு பலமாகவே இருந்து வருகிறது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடக்கும் முன்னரே ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என அறிவித்து காங்கிரஸ் கட்சியுடனான தனது நெருக்கத்தைக் காட்டினார் ஸ்டாலின்.

இந்த சூழலில், திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான பேச்சுக்கள் தில்லியிலும், அண்ணா அறிவாலயத்திலும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், எத்தனை தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவது என்பது தொடர்பாக இந்த பேச்சுக்கள் நடைபெற்றன. இதையடுத்து, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், கே.சி.வேணுகோபால் ஆகியோர் இன்று மாலை சென்னை வந்தனர். திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும், அதற்கான அறிவுப்புகள் இன்று மாலை வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

dmkcongress

அதன்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அப்போது அவர் தெரிவித்தார்.