அவதூறு வழக்கு: நேரில் ஆஜராக ஸ்டாலின், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நீதிமன்றம் சம்மன்

 

அவதூறு வழக்கு: நேரில் ஆஜராக ஸ்டாலின், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நீதிமன்றம் சம்மன்

முக்கொம்பு அணை உடைந்த விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து அவமதிப்பு வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஸ்டாலின், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

திருச்சி: முக்கொம்பு அணை உடைந்த விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து அவமதிப்பு வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஸ்டாலின், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

காவிரி ஆற்றில் ஏற்பட்ட அதிகப்படியான வெள்ளப் பெருக்கின் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் திருச்சியில் இருக்கும் முக்கொம்பு அணை உடைந்தது. தமிழக அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தான் முக்கொம்பு அணை உடைந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். 

stalin

இதனையடுத்து,  தமிழக அரசு மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு  பரப்பியதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சம்பத்குமார் அவதூறு வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கின் விசாரணை கடந்த 11-ம் தேதி, நீதிபதி குமரகுரு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த புகார் மனுவில் முகாந்திரம் இருப்பதால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் வருகிற பிப்ரவரி 13-ம் தேதி ஆஜராகுமாறு ஸ்டாலினுக்கு நீதிபதி குமரகுரு உத்தரவிட்டார்.

இதேபோல், முதல்வரும், தமிழக அமைச்சர்களும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு முக்கொம்பு அணையை உடைத்ததாக பேசிய முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீதும் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தது.

அந்த வழக்கையும் விசாரித்த நீதிபதி, வருகிற பிப்ரவரி 12-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு இளங்கோவனுக்கு உத்தரவிட்டார்.