அழகிய பெண்ணின் புகைப்படத்திற்கு லைக் போட்ட நபருக்கு நேர்ந்த கதி!

 

அழகிய பெண்ணின் புகைப்படத்திற்கு லைக் போட்ட நபருக்கு நேர்ந்த கதி!

ஃபேஸ்புக்கில் பெண் போல் நடித்து தனியார் நிறுவன ஊழியரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம்: ஃபேஸ்புக்கில் பெண் போல் நடித்து தனியார் நிறுவன ஊழியரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனசேகரன் (45) என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.

ஃபேஸ்புக்கை அதிகம் உபயோகிக்கும் பழக்கத்தை கொண்டிருந்த அவருக்கு, சில மாதங்களுக்கு முன் காயத்ரி என்ற பெயரில் நட்பு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அழகிய பெண்ணின் புகைப்படத்துடன் அந்த அழைப்பு வந்ததையடுத்து, லைக் செய்துவிட்டு தன் நட்பில் இணைத்துள்ளார் தனசேகரன்.

அன்று தொடங்கி இருவரும் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளனர். தன் கணவர் வெளிநாட்டில் பணியில் இருப்பதாகவும், தான் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். திடீரென ஒரு நாள் வாட்ஸப்பில் தனக்கு சிகிச்சை என்றும், அதற்கான பணத்தை தேடி அலைவதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

உடனடியாக தான் உதவுவதாக தனசேகரன் முன்வந்த நிலையில், நாகர்கோவில் பேருந்து நிலையம் வரும்படி அப்பெண் தெரிவித்துள்ளார். அதனையடுத்து அங்கு சென்ற தனசேகரனை, காயத்ரியின் தம்பி என கூறி ஒரு நபர் அழைத்துச் சென்றுள்ளார்.

அவரை மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று, மற்றொரு நபருடன் சேர்ந்து சரமரியாக தாக்கியுள்ளனர். மேலும், அவரிடமிருந்த ஏ.டி.எம் கார்ட் மூலம் 80 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இதுகுறித்து வடசேரி காவல் நிலையத்தில் புகாரளித்த தனசேகரன், நடந்தவற்றை எல்லாம் தெரிவித்துள்ளார். அதன்பின் போலீசார் நடத்திய விசாரணையில், பெண்போல் நடித்து தனசேகரனை ஏமாற்றிய பொன்னுலிங்கம் (30) மற்றும் சிவலிங்கம் (34) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.