அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது ஏமாற்றுவேலை- திருமாவளவன் 

 

அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது ஏமாற்றுவேலை- திருமாவளவன் 

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த ஆணை பொருந்தும் எனவும் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கும் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தமிழக அரசு அறிவித்தது. 

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பேரிடர் காலத்தில் அரசு ஊழியர்களின் உரிமைகளை ஒவ்வொன்றாகத் தமிழக அரசு  பறித்துக்கொண்டிருக்கிறது. அகவிலைப்படி பறிப்பு, ஈட்டிய விடுப்பைப் பணமாக்கிக் கொள்வதற்குத் தடை என அரசு ஊழியர்கள்மீது அடுத்தடுத்து தமிழக அரசு தாக்குதல் தொடுத்து வருகிறது. இப்போது ஓய்வுபெறும் வயதை 59 என ஆக்கிக் கண்துடைப்பு நாடகம் ஆடுகிறது. மாறாக, பறிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் உரிமைகளை மீள ஒப்படைக்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். ஓய்வு காலப் பலன்களை வழங்காமல் ஒத்திப் போடுவதற்காகவே இந்த நீட்டிப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறதே தவிர, அரசு ஊழியர்களுக்கு உதவுவதற்காக அல்ல என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம். 

thirumavalavan

அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை ஓராண்டு உயர்த்தியிருப்பது வேலையின்மை அதிகரித்துவரும் இந்த நேரத்தில் பொருத்தமானதுதானா என்பதை அரசு சிந்திக்கவேண்டும். இதனால் சில ஆயிரம்பேர் மட்டுமே பயனடையமுடியும். அரசு ஊழியர்களின் அகவிலைப் படியை மறுத்துள்ளதாலும்,  ஈட்டிய விடுப்பைப் பணமாக்குவதை நிறுத்தியுள்ளதாலும் இலட்சக் கணக்கான அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோலவே, இந்த ஆண்டில் ஓய்வுபெற இருந்தவர்கள் ஓய்வுக்காலப் பலன்களைக் கொண்டு பல வேலைகளைச் செய்ய திட்டமிட்டிருப்பார்கள். அந்தத் திட்டங்களும் அரசின் இந்த அறிவிப்பால் தகர்ந்து போயுள்ளன. 

இந்தியாவிலேயே வேலையின்மையின் அளவு மிக அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். தேசிய அளவில் வேலையின்மையின் அளவு 27.11% ஆக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் வேலையின்மையின் அளவு  49.8 % ஆக உள்ளது. வேலை வேண்டிப் பதிவு செய்துகொண்டு இலட்சக் கணக்கான இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த அரசு என்ன வழி சொல்லப்போகிறது?

எனவே, ஓய்வுபெறும் வயதை ஓராண்டுக்கு  உயர்த்தியுள்ள நாடகத்தை கைவிட்டு, பறிக்கப்பபட்ட உரிமைகளை மீண்டும் அரசு ஊழியர்களிடம் ஒப்படைப்பதற்கும் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கும் தமிழக அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளாஅர்