‘ZERO "0" IS GOOD’ : சாத்தியமானது விபத்து இல்லா சென்னை..

 
‘ZERO "0" IS GOOD’ : சாத்தியமானது விபத்து இல்லா சென்னை.. 


 சென்னையில் நேற்று '0' விபத்துகள் பதிவாகி உள்ளதாகச் சென்னை போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னையை விபத்தில்லா மாநகராக உருவாக்க போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது.  அதாவது ஆகஸ்ட் 6 முதல் 25ம் தேதி வரை, அதாவது 20 நாட்கள் சென்னை பெருநகர காவல் எல்லையில் விபத்தில்லா சென்னையை உருவாக்க திட்டமிடப்பட்டு,  இதற்காக  ஒரு வாரத்திற்கு முன்பே ‘ஜீரோ இஸ் குட்’ என்ற வாசகம் அடங்கிய பாதாகைகள் சென்னை முழுவதும் அனைத்து சிக்னல்களிலும் வைக்கப்பட்டது. அந்தவகையில் கடந்த 20 நாட்களாக சென்னையில் எங்கு பார்த்தாலும் ‘ஜீரோ இஸ் குட்’ என்கிற வாசகமே கண்முன் தெரிந்தது.  

‘ZERO

 போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் அறிவுறுத்தலின் படி, ‘ஜீரோ ஆக்சிடெண்ட் டே’ என்னும் நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தை கையிலெடுத்த போக்குவரத்து காவல் துறையினர், பள்ளி மாணவர்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்குவது, அத்துடன் ஆட்டோக்கள், பேருந்துகள், சாலையோரக் கடைகள், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள் வீடியோ, கலைநிகழ்ச்சிகள் என காணும் இடங்களில் எல்லாம் இதே விழிப்புணர்வு பரப்புரை தான்..

விபத்து இல்லா சென்னை.. ‘ZERO "0" IS GOOD’ ஒரு முயற்சி..  -  போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர்.. 

இவை மட்டுமின்றி விபத்தில்லா சென்னை மற்றும் போக்குவரத்து விதிகளை மக்கள் பின்பற்றும் நோக்கில், இந்த குறிப்பிட்ட காலத்தில் விபத்துகளோ, போக்குவரத்து விதிமீறல் வழக்குகளோ பதிவாகாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.  இதனையொட்டி அனைத்து போக்குவரத்து காவலர்களும் தீயாக விழிப்புணர்வு செய்து வந்தனர்.  

Zero Is Good
 
இந்நிலையில்  ZERO "0" IS GOOD என்கிற பரப்புரைக்கு பலனளிக்கும் விதமாக , சென்னையில் நேற்று(ஆக.26) விபத்துகள் எதுவும் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துகள் ஏற்படாமல் இருக்க நானே பொறுப்பு என ஒவ்வொருவரும் நினைத்தால் மட்டுமே இது சாத்தியம் எனக்கூறி தொடர் விழிப்புணர்வை மேற்கொண்டு வந்த போக்குவரத்து காவல்துறையினர் இந்த முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். இந்த 20 நாள் பிரச்சாரத்தில் தொடர்ந்து கடைசி 6 நாட்கள் சாலை விபத்து மரணங்கள் எதுவும் பதிவாவில்லை என்பதும் கூடுதல் சிறப்பு ஆகும். அனைவரும் நேர்ந்து முயன்றால் இந்தியாவின் பாதுகாப்பான சாலையாக சென்னை சாலைகளை மாற்றலாம் என போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.