ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு யுவன் சங்கர் ராஜா நோட்டீஸ்
வாடகை விவகாரத்தில் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பிரபல பின்னணி பாடகர், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது அவரது வீட்டின் உரிமையாளர் ஹஜ்மத் பேகம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
அதில், சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் வாடகை வீட்டில் வசித்து வந்ததாகவும், வாடகை பணம் ரூ.5 லட்சம் செலுத்தாமல் இரவோடு இரவாக வீட்டை காலி செய்யவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் வாடகைப் பணம் ரூ.20 லட்சத்தை செலுத்தாமல் ஸ்டூடியோவையும் காலி செய்வதாக உரிமையாளர் ஹஜ்மத் பேகம் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் 2018 முதல் வைத்திருந்த ஸ்டூடியோவிற்கு 3 ஆண்டுகளாக வாடகை தரவில்லை என உரிமையாளர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தன் மீது அவதூறு பரப்பிய உரிமையாளருக்கு யுவன் சங்கர் ராஜாவின் வழக்கறிஞர் தரப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் அதற்கு ரூ. 5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனையை உரிமையியல் ரீதியாகவும், குற்ற ரீதியாகவும் சட்டப்படி சந்திக்க உள்ளதாகவும் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.