நகை, பணத்துடன் ஆட்டம் போட்ட யூடியூபர்- ஆட்டைய போட்ட திருடன்
பிரபல யூடியூபர் மதுமிதா வீட்டின் பூட்டை உடைத்து 118 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில், தம்மத்து கோணம் பகுதியில் உள்ள விஐபி கார்டன் பகுதியை சேர்ந்தவர்கள் வினோத்குமார், மதுமிதா தம்பதி. இவர்கள் பிரபல யூடியூபர்களாக வலம் வந்தனர். வினோத்குமார் ஏலக்காய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மதுமிதா, தான் வாங்கும் புதிய தங்க நகைகள், கட்டுக்கட்டாக பணம், கழுத்து நிறைய நகையுடன் ரீல்ஸ்களாக எடுத்து யூடியூப், இஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

மதுமிதாவின் இதுபோன்ற அலட்டல் வீடியோக்களை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வந்த மர்ம நபர்கள், அக்குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ற நேரத்தில், வீட்டின் பின்பக்கக் கதவின் பூட்டை கட்டிங் மெஷின் மூலம் அறுத்து உள்ளே புகுந்துள்ளனர். பீரோவில் வைக்கப்பட்டிருந்த 118 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் மற்றும் ரூ.50,000 ரொக்கம் (மொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடி) ஆகியவற்றைச் சுருட்டிக்கொண்டு தப்பியோடிவிட்டனர். விஐபி கார்டன் பகுதி முழுக்க சிசிடிவி இருந்தும் வீட்டின் பின்புற கதவை உடைத்து, கைவரிசை காட்டிய கொள்ளையர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

