சிக்கலில் யூடியூபர் இர்பான்..!! மீண்டும் விசாரிக்க முடிவு..!!

 
Q

உணவு ரிவ்யூ செய்யும் யூடியூபரான இர்பான் தனது மனைவியின் வயிற்றில் இருந்த கருவின் பாலினம் குறித்து வெளிநாட்டில் பரிசோதித்து அறிவித்த வீடியோ, சில மாதம் முன் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, குழந்தை பிறக்கும் போதும் கூட, அவர் செய்த சேட்டையை வீடியோவாக எடுத்து வெளியிட்டு, மீண்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். 

இந்தியாவில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிவதும், அதை அறிவிப்பதும் சட்டப்படி குற்றமாகும். இதனால், மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த இர்பான் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

ஆனால், கடந்த திமுக ஆட்சியின் இர்பான் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக, இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறைக்கு இர்பான் மன்னிப்புக்கடிதம் மட்டும் கொடுத்தார். அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட சுகாதாரத்துறை இர்பான் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இர்பான் மீதான விசாரணையும் கடந்த திமுக ஆட்சியில் முடித்து வைக்கப்பட்டது. இர்பான் மீது எந்தவித சட்டநடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. 

இந்நிலையில், கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் யூடியூபர் இர்பானுக்கு சம்மன் அனுப்ப தமிழக மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது. மேலும், அவரை நேரில் அழைத்து விசாரிக்கவும் மருத்துவத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இர்பானுக்கு சம்மன் அனுப்ப மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. இதனால், இந்த வழக்கில் இர்பானிடம் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.