பட்டப்பகலில் நடுரோட்டில் முதியவரின் வாயை மூடி பணம் பறித்த இளைஞர்கள்

திருச்சியில் பட்டப்பகலில் முதியவரின் வாயை மூடி, சுற்றி வளைத்து அவரிடமிருந்து பணம் பறித்த மூன்று இளைஞர் கைதாகியுள்ளனர்.
திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன்(65). இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள லாரி நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் பணம் வசூலித்து விட்டு காந்தி மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரை பின்தொடர்ந்து வந்த மூன்று இளைஞர்கள் விஸ்வநாதனை பின் தொடர்ந்து அவரை தாக்கி அவர் பாக்கெட்டில் வைத்திருந்த 6000 ரூபாய் பணத்தை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இது குறித்து விஸ்வநாத் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் முதியவரை தாக்கி அவரிடமிருந்து பணத்தை பறித்து சென்ற விவகாரத்தில் அந்த சம்பவத்தில் ஈடுபட்ட வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த தர்மதுரை (20), இ.பி ரோடு பகுதியை சேர்ந்த அண்ணாமலை(21) மற்றும் வால்டின் ஜோசப் (17) ஆகிய மூன்று பேரை காந்தி மார்க்கெட் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பட்ட பகலில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.