"இளைஞர் அணி மாநில மாநாடு, மாபெரும் வரலாறு படைக்க அயராது உழைப்போம்" - உதயநிதி ஸ்டாலின் சூளுரை

 
udhayanidhi-3

இளைஞர் அணியின் 2-ஆவது மாநில மாநாட்டுக்கான செயல்வீரர் கூட்டங்கள் எழுச்சியும் - உற்சாகத்துடனும் நடத்தப்பட்டுள்ளன என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “5 நாட்களில் 16 கழக மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம்” என்கிறார்கள். நான் சூறாவளியாகச் சுற்றிச் சுழன்றேன் என்பதைவிடக் குறுகிய கால இடைவெளியில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை மாவட்ட வாரியாக அணிதிரட்டும் வல்லமை பெற்றது இந்தக் கழகம் என்பதுதான் நமக்கான பெருமை. சேலந்தில் நடைபெற உள்ள கழக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுக்கு இளைஞர்களைத் தயார்படுத்தும் வகையில், மாவட்ட வாரியாக 'இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம்’நடத்தலாம் எனத் திட்டமிட்டோம். முதல் கூட்டத்தைக் கடந்த 19-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடத்தினோம். அங்கு கூடிய இளைஞர்களின் எழுச்சிதான் அனைத்து மாவட்டங்களிலும் 'செயல்வீரர்கள்’ கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற உற்சாகத்தை எங்களுக்குத் தந்தது.

Udhayanidhi

திருமணம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக 25-ஆம் தேதி வருவதாக ஒப்புக்கொண்டிருந்த தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்தே அடுத்தடுத்த செயல்வீரர் கூட்டங்களை நடத்துவோம் என முடிவு செய்து மாவட்டக் கழகச் செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவித்தோம். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஆய்வுக் கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிட்டு நேரம் ஒதுக்கினோம்.‘20-ஆம் தேதிதான் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களைக் கூட்டி மிகப்பெரிய உண்ணாநிலை அறப்போராட்டத்தை நடத்தியுள்ளோம். மீண்டும் செயல்வீரர்கள் கூட்டம் என்றால், இளைஞர்கள் திரளாகக் கலந்துகொள்ள வருவார்களா’ என்ற சந்தேகம் எங்களுக்குள் இருந்தது.ஆனால், அந்தச் சந்தேகங்களை எல்லாம் பொய்யாக்கும் விதமாக அமைந்திருந்தது தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம். திலகர் திடல் என்பது பெரியார், அண்ணா, கலைஞர், கழகத் தலைவர் உள்படப் பலர் கூட்டம் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். அந்த இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதன்முதலாக நான் கலந்துகொள்வதும், அது இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டமாக அமைந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.

அத்துடன் , இன்று ஒரு நாள் பயணமாக திருவள்ளூர் மாவட்டம் செல்கிறேன். அங்கும் காலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம். மாலையில் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. "மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்" என்ற அண்ணாவின் வாக்கின்படி, முத்தமிழறிஞர் வழியில், கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டலில் அடுத்தப் பயணத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும்" என்று குறிப்பிட்டுள்ளார்.