பூங்காவில் இளைஞர் வெட்டிக்கொலை- சென்னையில் பரபரப்பு

 
ச்

சென்னையில் இளைஞர் ஒருவர் பூங்காவில் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Image

சென்னையில் பெரவள்ளூர் லோகோ ஒர்க்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் சந்துரு(26). இன்டீரியர் டெக்கரேட்டராக பணியாற்றி வரும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சந்துரு இன்று மாலை பெரவள்ளூர் பி‌வி காலனி பகுதியில் சேர்ந்த பெங்கால்(30) என்கிற நபர் உள்ளிட்ட சிலருடன் மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் மதுபோதையில் நண்பர்கள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனை அடுத்து சத்துரு அங்கிருந்த புறப்பட்டு வீட்டிற்கு வந்துள்ளார். 

பின்னர் மாலை 6 மணியளவில் சந்துரு வீட்டிற்கு வந்த சிலர், அவரை பெங்காலுடன் சமாதானம் பேசுவதற்காக வீட்டருகே உள்ள பூங்காவிற்கு அழைத்து சென்று பேசிக்கொண்டிருந்த நேரத்தில் பெங்கால் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சந்துருவை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு ஆட்டோவில் தப்பிச் சென்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் பெரவள்ளூர் போலீஸார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று கொலையுண்ட சந்துரு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளிகளை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடினர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சந்துருக்கும்- பெங்காலுக்கும் மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டதும், பின்னர் சந்துரு வீடு சென்ற நிலையில் பெங்கால் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து கொண்டு தனது நண்பர்கள் 5 பேருடன் சந்துரு வீட்டிற்கு சென்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

Image

பின்னர் பெங்கால் சந்துருவை சமாதானம் பேச அழைத்து சென்று அருகில் உள்ள பூங்கா அருகே வைத்து வெட்டி கொலை செய்ததும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்கால் பெரவள்ளூரில் இருந்து வீட்டை காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தது விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவத்தில் கொலைக்கு உடந்தையாக இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அருணாச்சலம், தமிழரசன் ஆகிய இரண்டு பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸார் பெங்கால் மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்து விசாரணை மேற்கொண்ட பின்னரே சந்துரு கொலைக்கான முக்கிய காரணம் தெரிய வரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.