கேபிள் வயர் சரி செய்தபோது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
கோட்டூரில் மின் கம்பத்தில் கேபிள் வயர் சரி செய்தபோது மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெருஞ்சனங்குடி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகன் அசோக் (23). இவர் கோட்டூரில் உள்ள தனியார் கேபிள் டிவி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இன்று காலை கோட்டூர் சத்திரம் பகுதியில் கேபிள் ஒயரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய மின்கம்பத்தில் கட்டியிருந்த கேபிள் ஒயரை செய்து கொண்டிருந்தபோது அவரது தலைக்கு மேலே சென்ற மின் வடத்தில் அசோக்கின் கை உரசியதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடிய நிலையில் மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து உடனடியாக அசோக்கை கீழே இறக்கி ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் அசோக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து கோட்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


