நல்ல பாம்பை விளையாட்டாக பிடிக்க முயன்ற இளைஞர் பலி
சேலத்தில் விளையாட்டாக நாகப்பாம்பை பிடிக்க முற்பட்ட இளைஞரை பாம்பு கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/media_files/2025/08/29/a5016-2025-08-29-07-25-45.jpg)
சேலம் அருகே நிலவாரப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜமுருகன்(21) என்ற இளைஞர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். தந்தையை இழந்த இளைஞர் ராஜமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு ஒன்றை பிடிப்பதற்காக, நண்பர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது வீட்டின் மூலையில் சுமார் ஆறு அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு , சுருண்டு படுத்திருந்தது. இதனைக் கண்ட வாலிபர் ராஜமுருகன் , குச்சி ஒன்றின் மூலம் பாம்பின் கழுத்து பகுதியை அழுத்திக் கொண்டு , அதன் தலையை கையினால் பிடிக்க முயன்றார். அப்போது சீறிய நல்ல பாம்பு , வாலிபரின் வலது கை நடு விரலில் கொத்தியது.
விரலில் இருந்து ரத்தம் கட்டிய நிலையிலும் , பாம்பு கொத்திய இடத்திற்கு மேல் புறமாக விரலில் கயிறு ஒன்றினை இறுக்கமாக கட்டிக்கொண்டு மீண்டும் பாம்பை பிடிக்க முற்பட்டு உள்ளார். வலி அதிகமான நிலையில் உடனடியாக வாலிபர் ராஜமுருகனை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் விஷம் உடல் முழுவதும் பரவியதால் வாலிபர் சுயநினைவை இழந்துள்ளார். அரசு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் , சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். விளையாட்டாக பாம்பை பிடிக்க முற்பட்ட இளைஞர் , பாம்பு கடித்து உயிரை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இளைஞர் பாம்பை பிடிக்க முற்படும் போது பாம்பு கடிக்கும் வீடியோ வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


