விநாயகர் சதுர்த்திக்கு பந்தல் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
சென்னை அடுத்த மாதவரத்தில் வினாயகர் சிலை அமைக்க பந்தல் அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கியதில் கூலித்தொழிலாளி பலியானார்.

செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் மண்ணடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பிரசாந்த் (வயது 22). இவர் சுப ,துக்க நிகழ்ச்சிகளுக்கு பந்தல் போடும் தொழிலாளி. மாதவரம் ராஜாஜி தெருவில் இந்து முன்னணி சார்பில் 20 அடி உயர விநாயகர் சிலை வைப்பதற்கான பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது மேலே உள்ள உயர் அழுத்த மின்சார கம்பியை கவனிக்காமல் பணியில் ஈடுபட்ட பிரசாந்தை மின்சாரம் தாக்கியது.
சக தொழிலாளிகள் அவரை ஆட்டோவில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பிரசாந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாதவரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

