ஆன்லைன் ரம்மியில் ரூ.6 லட்சத்தை பறிகொடுத்த இளைஞர் தற்கொலை
சென்னை புழலில் ஆன்லைன் ரம்மியில் ரூ.6 லட்சத்தை பறிகொடுத்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் அடுத்த புத்தகரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (32). இவர் சென்னையில் இயங்கி வரும் தனியார் வங்கியின் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்தார். வெளியே சென்றிருந்த முருகனின் தாய் நேற்று மாலை வீடு திரும்பிய போது கதவு உள் பக்கம் தாழிடப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக தட்டிப் பார்த்தும் கதவு திறக்காததனால் ஜன்னலை திறந்து பார்த்தபோது முருகன் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் புழல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த புழல் போலீசார் முருகன் சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் ஆன்லைன் ரம்மியில் சுமார் ரூ.6 லட்சம் இழந்ததால் முருகன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து புழல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


