இன்ஸ்டா நட்பு- இளம்பெண்ணை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்கள் கைது

 
ஆபாச படம்

இன்ஸ்டாகிராமில் நட்பாக பழகி புதுச்சேரி இளம்பெண்ணை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய சென்னை வாலிபர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இன்ஸ்டா

புதுச்சேரியின் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் (32) ஒருவர், கடந்த 4 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார். அவருடைய இன்ஸ்டாகிராம் ஐடிக்கு நண்பராக ஒருவர் அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் கால் அழைப்பை ஏற்று, அந்த நபருடன் 2 வாரமாக பேசி பழகியுள்ளார். நெருங்கி பழகியதால், அந்த நபர் கேட்டுக்கொண்டதன் பேரில் சம்மந்தப்பட்ட பெண் நிர்வாணமாக வீடியோ காலில் அவருடன் பேசியுள்ளார். இதனை அந்த நபர் ஸ்கிரீன் ரெக்கார்டு மூலம் பதிவு செய்து வைத்துக்கொண்டார். பின் அந்த பெண் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். 6 மாதங்களுக்கு பிறகு அந்த நபர் என்னிடம் ஏன்? முன்பு போல் பேசுவதில்லை. நான் சொல்லும் போதெல்லாம் நீ என்னிடம் அதே போன்று பேச வேண்டும். இல்லையென்றால் நீ நிர்வாணமாக இருக்கும் வீடியோ இருக்கிறது. இதனை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழிக்கும் வீடியோவை அனுப்பி மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார், நிர்வாண வீடியோவை வைத்து பெண்ணை மிரட்டிய சென்னையை சேர்ந்த தினேஷ்குமார் (23), அவரது நண்பர் அருண்பாண்டியன் (28) ஆகியோரை கைது செய்தனர். தொடர் விசாரணையில், தினேஷ்குமார் ரெக்கார்டு செய்த நிர்வாண வீடியோவை அவருடைய நண்பர் அருண் பாண்டியன் கேட்டதால் அந்த வீடியோவை அவருக்கும் அனுப்பியிருப்பது தெரியவந்தது. அந்த வீடியோவை வைத்துக்கொண்டு அருண்பாண்டியனும், சம்மந்தப்பட்ட பெண்ணை வீடியோ காலில் வருமாறு மிரட்டியுள்ளார். தொடர்ந்து போலீசார், தினேஷ்குமார், அருண்பாண்டியன் ஆகியோரை தலைமை குற்றவியல் நீதிபதி மோகன் முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். 

நிர்வாண வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பரப்புவோம்: பியூட்டி பார்லர்  பெண்ணுக்கு மிரட்டல்

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ கால் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் டெலிகிராம் போன்ற அழைப்புகளை பொதுமக்கள் ஏற்க வேண்டாம். குறிப்பாக பெண்கள் ஏற்க வேண்டாம். நம்முடைய புகைப்படம், வீடியோக்களை வைத்துக்கொண்டு, மோசடிக்காரர்கள் மிரட்டுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. புகைப்படங்கள் கிடைத்துவிட்டாலே, அதனை நிர்வாணமாக மார்பிங் செய்து, அனுப்பி பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இணையத்தை பயன்படுத்தும் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றனர்.