நெல்லையில் இளம் பெண் மரணம்- தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
நெல்லையில் இளம் பெண் தற்கொலை விவகாரத்தில் திருப்பமாக தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெப்ரின் டேவிட்சன் (வயது 35). இவர் நெல்லையில் கார் வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி பிரியங்கா. இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து குடும்பத்தோடு இந்த பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் ஜெப்ரின் டேவிட்சன் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக மனைவி பிரியங்காவிடம் ஜெப்ரின் டேவிட்சன் புதிதாக தொழில் தொடங்குவதற்காக பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி திடீரென பிரியங்கா உடல் நலக்குறைவால் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரியங்காவின் உறவினர்களிடம் ஜெப்ரின் டேவிட்சன் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்த போது பிரியங்கா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார். நாட்களாக சிகிச்சையில் இருந்த பிரியங்கா நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறிந்த பிரியங்காவின் குடும்பத்தினர் பிரியங்காவை அவரது கணவர் ஜெப்ரின் டேவிட்சன் தான் துன்புறுத்தி கொலை செய்திருப்பதாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆன நிலையில் நெல்லை ஆர்டிஓ இந்த வழக்கில் தலையிட்டு விசாரணை நடத்தினார்.
விசாரணையில் பிரியங்காவின் தலை, கால்கள், முட்டி பகுதிகளில் காயம் இருந்திருக்கிறது. தொடர்ச்சியாக அவரது உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகு முழு விவரம் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது. பாளையங்கோட்டை காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிரியங்காவை அடிக்கடி பணம் கேட்டு கணவர் செப்ரின் டேவிட்சன் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனையில் மனம் உடைந்து பிரியங்கா தற்கொலை செய்திருப்பதாகவும் இதனால் தற்கொலைக்கு தூண்டியதாக ஜெப்ரின் டேவிட்சன் மீது பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஜெப்ரின் டேவிட்சனை கைது செய்து விசாரணையை தொடக்கியுள்ளனர்.


