வீட்டில் துணி அயர்ன் செய்யும்போது மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி

சென்னையில் வீட்டில் துணி அயன் பண்ணும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரி பள்ளி தெருவை சேர்ந்தவர் சுமதி (வயது 35). இவர் அருகில் உள்ள தனியார் மருத்துவ கிளினிக்கில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் பணிக்கு வராததாலும் போன் செய்தால் எடுக்காததாலும் சந்தேகம் அடைந்த சக தோழி அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அயர்ன் பாக்ஸ் முற்றிலும் எரிந்த நிலையில் இருந்துள்ளது, அதேபோல் சுமதி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சிடைந்துள்ளார்.
பின்பு கூச்சலிட்டுக் கொண்டே வெளியே வந்த போது சுமதியின் மைத்துனர் கணேஷ் என்பவர் வந்து பார்த்துவிட்டு சபரிமலை கோவிலுக்கு சவாரிக்குச் சென்ற சுமதியின் கணவர் ராஜிக்கு தகவல் தெரிவித்தார். பின்பு சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
துணியை அயர்ன் பண்ணும் போது அயன் பாக்ஸில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் கூடுவாஞ்சேரி பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.