உங்களுக்கு அக்டோபர் 1 வரை தான் டைம்... நாய் விற்பனை செய்யும் கடைகளுக்கு பறந்த உத்தரவு!

 
1 1

தமிழ்நாட்டில் தெரு நாய்களின் தொல்லையால் தெருக்களில் செல்லவே மக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நாய் கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆக்ரோஷமான நாய்களாலும் பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நிகழ்கின்றன.

மேலும், செல்லப் பிராணி வளர்க்கிறோம் என வெளிநாட்டு நாய் இனங்களை வாங்கி வந்து வளர்ப்பவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் அதற்கு உணவு அளிக்க முடியாமல் தெருவில் விட்டுவிடுகின்றனர். அவ்வாறு தெருவில் விடப்படும் நாய்களும் வெறிப்பிடித்து மனிதர்களை கடித்து வைக்கிறது.

இந்த நிலையில், அக்டோபர் 1ந் தேதிக்குப் பின் பதிவு செய்யாமல் இயங்கும் நாய் விற்பனை கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் எச்சரித்துள்ளது.

'' தமிழ் நாட்டில் இயங்கிவரும் அனைத்துச் செல்லப் பிராணிகள் விற்பனை நிலையங்களும், மத்திய சுற்றுசூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் அறிவிக்கை GSR 844 (E) நாள் 6.9.2025 - பிராணிகள் வதை தடுப்பு (செல்லப் பிராணிகள் விற்பனை நிலையம்) விதிகள்2018ன் படியும், தமிழ்நாட்டில் இயங்கிவரும் அனைத்து நாயின இனப்பெருக்கம் மற்றும் விற்பனை நிலையங்களும் மத்திய சுற்றுசூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் அறிவிக்கை GSR 496 (E) நாள்: 23.05.2017 - பிராணிகள் வதை தடுப்பு சட்டப்படி (நாயின இனப்பெருக்கம் மற்றும் விற்பனை விதிகள்) 2017-ன் படியும் தமிழ்நாடு பிராணிகள் நலவாரியத்திடம் பதிவுசெய்து கொள்ளப்பட வேண்டும் என 12.9.2020 அன்று பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், அந்த அறிவிப்பினையை ஏற்று ஒரு சில செல்லப் பிராணிகள் விற்பனை நிலையம் (pet shop) மற்றும் நாயின இனப்பெருக்கம் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் தமிழ்நாடு பிராணிகள் நலவாரியத்தில் பதிவு மேற்கொண்டுள்ளனர்.

எனவே, இதுவரை பதிவு செய்யாமல் நிறுவனங்களை நடத்துபவர்கள் உடனடியாக இணைய தள முகவரி: https://tnawb.tn.gov.in/ இணையதளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30.9.2025 க்குள் மேலே குறிப்பிட்டுள்ள விலாசத்திற்கு கிடைக்கப்படும் வகையில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், 1.10.2025 க்குப்பின் பதிவு செய்யாமல் நடத்தப்படும் நிறுவனங்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என அதில் கூறப்பட்டுள்ளது.