நாளை முதல் மே மாதம் வரை வெள்ளியங்கிரி மலை ஏறலாம்..!

 
1

வெள்ளியங்கிரி மலை உச்சியில் சுயம்பு லிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஒவ்வோர் ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி அடுத்த மாதம் (பிப்ரவரி) 26ம் தேதி வருகிறது. இதையொட்டி வெள்ளியங்கிரி மலையேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்து உள்ளது. அதில், பக்தர்கள் வருகிற பிப்ரவரி 1ம் தேதி முதல் மே மாதம் இறுதி வரை வெள்ளியங்கிரி மலை ஏறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மலையை ஏற மூங்கில் தடி மிகுந்த உதவியாக இருக்கும். வன விலங்குகள் நிறைந்த மலைப் பாதையில் சிவபெருமானை நினைத்துக் கொண்டு ”ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா” என்ற முழக்கத்துடன் பக்தர்கள் மலை ஏறுவர். முதல் இரண்டு மலை பக்தர்களை கடுமையாக சோதனைக்கு உட்படுத்தும். அந்த அளவுக்கு கரடு முரடான பாதைகள், மரங்களின் வேர்கள், கற்கள் போன்றவை காணப்படும்.

இந்த முதலிரண்டு மலைகளை கடந்து விட்டால், அடுத்த ஐந்து மலைகளை சுலபமாக கடந்து விடலாம். நடந்து செல்லும் பக்தர்களின் வேகத்தை பொறுத்து மூன்றரை முதல் ஐந்து மணி நேரத்தில் மலை ஏறி விடலாம். இந்த மலைப் பாதை அரிய பல மூலிகை செடிகளை கொண்டுள்ளது.

7-வது மலை உச்சியை அடைந்து சூரிய உதயத்தை காண்பது கண் கொள்ளா காட்சி ஆக இருக்கும். மலையில் ஏறி, இறங்கிய பக்தர்களின் உடலில் புது வித்தியாசத்தை உணர்வர். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைப் பாதையின் நுழைவாயில் அருகே வனத்துறையினர் சோதனை நடத்தும் இடம் உள்ளது.

மலை ஏற செல்லும் பக்தர்கள் கொண்டு வரும் உடைமைகளை சோதனை செய்த பின்னர், பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப் படுகின்றனர். பிப்ரவரி மாதம் தொடக்கம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவர்.