இனிமே நீ எனக்கு மகளே இல்லை..! உயிருடன் இருக்கும் மகளுக்கு பாடை கட்டி இறுதிச்சடங்கு செய்த தந்தை..!
பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டம், கேநகர் அருகே உள்ள சப்பாய் கிராமத்தை சேர்ந்த சிறு விவசாயி மனோஜ் கோஸ்வாமி. இவரது மூத்த மகள் ரியா குமாரி (பி.ஏ. முதலாண்டு மாணவி). கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி, ரியா தன் வீட்டை விட்டு வெளியேறி வேறொரு சாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
மகனைக் காணவில்லை என தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், டெல்லியில் இருந்த இருவரையும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் மீட்டனர்.
வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரியா, தனது விருப்பத்தின் பேரிலேயே காதலனுடன் சென்றதாகவும், அவருடனேயே வாழ விரும்புவதாகவும் தந்தை மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார்.
தான் மிகுந்த ஆசையோடு வளர்த்த மகள், குடும்பத்தின் கௌரவத்தைச் சீரழித்துவிட்டதாக கூறி மனமுடைந்த மனோஜ் கோஸ்வாமி, மகளுடனான உறவை முற்றிலும் அறுத்துக்கொள்ள முடிவெடுத்தார்.
திங்கள்கிழமை இரவு தனது மகளின் உருவப்பொம்மையை செய்து, அதில் மகளின் புகைப்படத்தையும் ஒட்டினார். செவ்வாய்க்கிழமை காலை, உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதி ஊர்வலம் நடத்தப்படவுள்ளதாகக் கூறி கிராமமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
பின்னர், இந்து பாரம்பரிய முறைப்படி பாடை அலங்கரிக்கப்பட்டு, கிராம மக்கள் முன்னிலையில் ஊர்வலமாக மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, உருவப்பொம்மைக்கு தீ மூட்டி தகனம் செய்யப்பட்டது. மேலும், மகளுக்கான காரியச் சடங்குகளை (ஷ்ராத்தம்) முறைப்படி செய்யப் போவதாகவும் தந்தை அறிவித்துள்ளார்.
"எனது மகளின் உயர்கல்விக்காகவும் எதிர்காலத்திற்காகவும் பல கனவுகளை வைத்திருந்தேன். ஆனால், அவள் என் கனவுகளையும் குடும்பத்தின் கௌரவத்தையும் உடைத்துவிட்டாள். அதனால் தான் அவளுடனான உறவை முடிவுக்குக் கொண்டுவர இந்த முடிவை எடுத்தேன்" என தந்தை மனோஜ் கோஸ்வாமி தெரிவித்துள்ளார். உயிருடன் இருக்கும் மகளுக்கு தந்தையே பாடை கட்டிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

