ஏற்காடு : கிரேன் கவிழ்ந்து இளைஞர் உடல் நசுங்கி பலி..
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தனியார் எஸ்டேட்டில் கிரேன் எந்திரம் கவிழ்ந்ததில் , இளைஞர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோடைவாசஸ்தலமான ஏற்காட்டில் காபி எஸ்டேட்டுகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொட்டச்சேடு மலை கிராமத்தில் சித்தார்த்தன் என்பவருக்கு சொந்தமான கல்லேரிமலை காபி எஸ்டேட்டில் , கிரேன் எந்திரம் மூலம் மரத்துண்டுகளை லாரியில் ஏற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த கிரேன் எந்திரத்தை ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் தாமோதரன்(31) என்பவர் இயக்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை கிரேன் எந்திரம் மூலம் மரம் ஏற்றி கொண்டிருந்த பொழுது , மரத்தின் பாரம் தாங்காமல் கிரேன் எந்திரம் பின்னோக்கி நகர்ந்து சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது கிரேன் எந்திரத்தை இயக்கிக்கொண்டிருந்த தாமோதரன் எந்திரத்தின் அடியில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து , சம்பவ இடத்திற்கு சென்ற ஏற்காடு போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தில் உயிரிழந்த தாமோதரனின் உடலை கைப்பற்றி , சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இத்துயர சம்பவம் ஏற்காடு எஸ்டேட் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

