ஏற்காடு பேருந்து விபத்து - ரூ. 10 லட்சம் நிவாரண உதவி வழங்க ஓபிஎஸ் கோரிக்கை!!
ஏற்காடு மலைப் பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்க ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை விடுமுறையை ஒட்டி மலைப் பகுதிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் பயணிக்கின்ற நிலையில், ஏற்காட்டிலிருந்து சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, ஏற்காடு மலைப்பாதையின் 11-வது கொண்டை ஊசி வளைவில் நிலைதடுமாறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், 45 பேர் படுகாயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

மேற்படி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேற்படி விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றாலும், மிதமிஞ்சிய வேகம், சாலை விதிகளை அவமதிப்பது, மது அருந்திவிட்டு ஒட்டுதல், அனுபவமின்மை போன்றவைதான் சாலை விபத்துகளை ஏற்படுத்துகின்றன. கோடைக் காலம் என்றாலே மலைப் பகுதிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் செல்வது வாடிக்கை. இதனைக் கருத்தில் கொண்டு, 'வேகம் விவேகமன்று என்பதை ஓட்டுநர்கள் மத்தியில் எடுத்துரைத்து, சாலை விதிகளுக்கு ஏற்ப வாகனத்தை இயக்க அரசு நடவடிக்கை எடுக்குமேயானால், இதுபோன்ற சாலை விபத்துகளை தவிர்க்கலாம்.

பொதுவாக பேருந்தில் பயணிப்போர் ஏழையெளிய, நடுத்தர மக்கள் என்பதால், மேற்படி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் நிவாரண உதவியும், காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை மற்றும் 2 இலட்சம் ரூபாய் நிவாரண உதவியும் வழங்க வேண்டுமென்று தி.மு.க. அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


