ஏற்காடு 46வது கோடை விழா இன்று தொடக்கம்..

 
flower exibition flower exibition

ஏற்காட்டில் 46வது கோடை விழா இன்று தொடங்குகிறது.  8 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு, அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது! இதுவரை இல்லாத வகையில்  அண்ணா பூங்கா முழுவதும்  வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  

கோடைக்காலங்களில் மக்கள் மலைபிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். அந்தவகையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் இடம் என்றால் ஏற்காட்டை சொல்லலாம்.    20 கொண்டை ஊசி வளைவுகள்,  வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை,   பூத்துக் குலுங்கும் மலர்கள், இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான காட்சிகள், கோடை வெப்பத்தை தணிக்கும் இதமான சூழல் என பல்வேறு  சிறப்புகளைக் கொண்டுள்ளது.  ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 46 ஆவது கோடை விழா இன்று   (21-05-23 ) மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.   

yercaud

8 நாட்கள் (மே 27)  நடைபெறும் இந்த கோடை விழாவை முன்னிட்டு ஏற்காடு அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மலர் கண்காட்சியினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அமைச்சர்கள் எம் ஆர் கே.  பன்னீர்செல்வம், ராமச்சந்திரன் மற்றும் மதிவேந்தன் ஆகியோர் தொடக்கி வைக்கவுள்ளனர். இதற்காக  பல்வேறு இடங்களில் இருந்தும் அரிய வகை பூக்கள் வரவழைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் அரியவகை மலர்செடிகள்,  சுமார் ஐந்து லட்சம் பல வண்ண  மலர்களைக் கொண்டு பொன்னியின் செல்வன் கப்பல், டைனோசர், சோட்டா பீம் உள்ளிட்ட  பல  பிரமாண்ட மலர் அலங்கார வடிவமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.  

Flower Show

இதுவரை இல்லாத வகையில்  ஏற்காடு நுழைவுப் பகுதி முதல் அண்ணா பூங்கா வரை சுற்றுலா பணிகளை வரவேற்கும் வகையில் சாலைகளில் வண்ணமயமான  மின்  விளக்குகள்  அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி மட்டுமல்லாமல் காய்கறி கண்காட்சி,  பூக்களின் அணிவகுப்பு உள்ளிட்ட  மலர் அலங்காரமும்  சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி கடந்த ஆண்டை விட  இந்த ஆண்டு ஏற்காட்டில் சுற்றுலா பயணிகல் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.   அத்துடன் ஏற்காடு நகரப் பகுதியிலிருந்து செல்லும் பிரதான மலை பாதை ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. மேலிருந்து கீழே இறங்க குப்பனூர்  வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.