4 நாட்களுக்கு மஞ்சள் அலெர்ட்.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..
தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு (ஆக.13 வரை) கனமழைக்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த ஒரு வாரமாகவே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட தமிழக மாவட்டங்கள், தென் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. அதிலும் கடந்த 2 நாட்களில் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 180 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 7 செ.மீ முதல் 11 செமீ வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆகஸ்ட் 10, 11, 12, 13 ஆகிய 4 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றும் நாளையும்( ஆக.10, 11) கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.