யார் அந்த சார்?Vsஇவர்தான் அந்த சார்...! அனல்பறக்கும் சட்டப்பேரவை!
யார் அந்த சார்? என்ற பேட்ஜ் உடன் அதிமுக உறுப்பினர்களும், 'இவன்தான் அந்த சார்' என்ற பதாகையுடன் திமுக உறுப்பினர்களும் சட்டப்பேரவைக்கு வருகை வந்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கைதான ஞானசேகரன் சார் என்று யாரிடமோ செல்போனில் பேசியதாக அந்த மாணவி கூறி வருவதாக கூறப்படுகிறது. இதனால் யார் அந்த சார்? என்ற வாசகம் தமிழக அரசியலில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதேபோல் அதிமுக எம்.எல்.ஏக்கள் யார் அந்த சார்? என்ற வாசகம் அடங்கிய பேட்ஜ் அணிந்தபடி கடந்த சில நாட்களாக சட்டப்பேரவைக்கு வருகின்றனர்.
இந்த நிலையில், யார் அந்த சார்? என்ற பேட்ஜ் உடன் அதிமுக உறுப்பினர்களும், 'இவன்தான் அந்த சார்' என்ற பதாகையுடன் திமுக உறுப்பினர்களும் சட்டப்பேரவைக்கு வருகை வந்துள்ளனர். அண்ணாநகர் சிறுமி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் நிர்வாகியின் படத்துடன் 'இவர்தான் அந்த சார்' என்ற போஸ்டருடன் சட்டப்பேரவை வளாகத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கோஷமிட்டனர். அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை பாதுகாத்து, தப்பிக்க முயற்சித்த அதிமுக பிரமுகர் சுதாகர் கைதானது குறிப்பிடத்தக்கது.