"ராங் கால்" காதல்... கொலை செய்துவிட்டு காசியில் புனித நீராடல்! - விசாகப்பட்டினத்தில் நடந்த பகீர் சம்பவம்..!

 
1

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த காப்பு லட்சுமி (45), வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவரது கணவர் அரசு ஊழியர், மகள்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு 'ராங் கால்' மூலம் பொப்பிலியைச் சேர்ந்த சிவா என்பவருடன் இவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. சிவாவிற்கும் திருமணமாகி குழந்தைகள் இருந்த நிலையில், இன்ஸ்டாகிராம் மற்றும் தொலைபேசி வாயிலாக வளர்ந்த இவர்களது நட்பு, நாளடைவில் முறையற்ற தொடர்பாகவும் நெருக்கமாகவும் மாறியது.

இந்தக் கதையின் வில்லனான சிவா, கிரிக்கெட் சூதாட்டத்திற்கு அடிமையாகி சுமார் ஒரு கோடி ரூபாய் வரை பணத்தை இழந்திருந்தார். தனது கடன்களை அடைக்க காப்பு லட்சுமியிடம் இருந்து அவ்வப்போது பெருந்தொகையைப் பெற்று வந்துள்ளார். ஆனால், வாங்கிய அந்தப் பணத்தையும் சூதாட்டத்திலேயே பறிகொடுத்துவிட்டு, மீண்டும் மீண்டும் லட்சுமியைத் தொந்தரவு செய்யத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் லட்சுமி பணம் தர மறுத்ததால், அவரைக் கொன்று நகைகளை அபகரிக்க சிவா திட்டமிட்டார்.

கடந்த 11-ம் தேதி, போலீசில் சிக்காமல் இருக்க ஒரு வழிப்போக்கரின் செல்போனை வாங்கி லட்சுமியைத் தொடர்பு கொண்ட சிவா, கடைசியாக ஒருமுறை நேரில் பேச வேண்டும் எனக் கூறி ஆசை வார்த்தை பேசியுள்ளார். லட்சுமி அதனை நம்பி, தனது கணவர் வெளியே சென்ற நேரத்தில் சிவாவை வீட்டிற்கு வரவழைத்தார். இந்தச் சந்திப்பைத் தனது திட்டத்தை நிறைவேற்றப் பயன்படுத்திக் கொள்ள சிவா தீர்மானித்தார்.

குற்றவாளி சிவா மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட்டார். தனது இருசக்கர வாகனத்தை 5 கி.மீ தள்ளியே நிறுத்திவிட்டு, அடையாளம் தெரியாமல் இருக்க முகக்கவசம் மற்றும் தொப்பி அணிந்து, மூன்று ஆட்டோக்களை மாறி மாறி ஏறி லட்சுமியின் வீட்டை அடைந்தார். வீட்டிற்குள் சென்ற சிறிது நேரத்திலேயே மீண்டும் பணத்திற்காக இருவருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது. இதில் ஆத்திரமடைந்த சிவா, லட்சுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.

கொலை செய்த பின்னர், லட்சுமி அணிந்திருந்த 5 சவரன் நகைகள் மற்றும் பீரோவில் இருந்த 5 லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவற்றைச் சிவா கொள்ளையடித்தார். பிறகு அங்கிருந்து தப்பிச் செல்லும் வழியில், தான் அணிந்திருந்த ஆடைகளை மாற்றிவிட்டு வேறொரு ஆட்டோவில் ஏறித் தப்பிச் சென்றார். மதியம் ஒரு மணி அளவில் வீட்டிற்கு வந்த லட்சுமியின் கணவர், தனது மனைவி சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் அளித்தார்.

முதலில் இது நகைப் பறிப்புக்காக நடந்த கொலை என்று போலீசார் கருதினாலும், லட்சுமியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது சிவாவின் மீது சந்தேகம் வலுத்தது. இதற்கிடையே, கொலை செய்த பாவத்தைப் போக்க சிவா காசிக்குத் தப்பிச் சென்றார். அங்கு கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதருக்குச் சிறப்புப் பூஜைகள் செய்துவிட்டு ஆந்திராவிற்குத் திரும்பினார். தான் குற்றவாளி எனத் தெரிந்ததும், ஒரு வீடியோ வெளியிட்டுவிட்டு சென்னைக்குத் தப்பிச் செல்ல முயன்றார்.

விசாகப்பட்டினம் போலீசார் துரிதமாகச் செயல்பட்டு சென்னைக்குத் தப்பிச் செல்ல முயன்ற சிவாவைக் கைது செய்தனர். விசாரணையில், ராங் காலில் தொடங்கிய நட்பு, பேராசை மற்றும் சூதாட்ட மோகத்தால் ஒரு கொலையில் முடிந்தது அம்பலமானது. கைதான சிவாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.