வரும் செப்டம்பர் 8-ல் உலக எழுத்தறிவு தினம்..! சிறப்பாக கொண்டாட பள்ளிக்கல்வித் துறை உத்தரவு..!
நாடு முழுவதும், கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களைக் கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்’ 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம் இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் (2024-25) எழுதப் படிக்கத் தெரியாத 6.14 லட்சம் பேர் கண்டறியப்பட்டனர். அவர்களுக்காக தமிழகம் முழுதும் கற்போர் மையங்கள் தொடங்கப்பட்டு கடந்த ஜூலை 15-ம் தேதி முதல் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கப்படுகிறது. இதற்காக மொத்தம் 30,814 தன்னார்வலர்களின் உதவியுடன் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனுடன், கற்போரையும், தன்னார்வலர்களையும் ஊக்குவிப்பதற்காக அவர்கள் வசிக்கும் பகுதி சார்ந்த தொழிற் திறன்களை வளர்த்தல், கற்போரின் தனித்திறன்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவித்தல், தேசிய, மாநில அளவிலான முக்கிய தினங்களை கொண்டாடுதல் உட்பட செயல்பாடுகளும் எழுத்தறிவு மையங்களில் நடத்தப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக உலக எழுத்தறிவுத் தினத்தை (செப்டம்பர் 8) சிறப்பாக கொண்டாட தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அனைத்து எழுத்தறிவு மையங்களிலும் செப்டம்பர் 1 முதல் 8-ம் தேதி வரை விழிப்புணர்வு பேரணி, உறுதி மொழி ஏற்பு, சிறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்த வேண்டும். இந்நிகழ்வில் மாணவர்கள், கற்போர்கள், தன்னார்வலர்கள், திட்ட ஒங்கிணைப்பாளர்கள், முதன்மை, மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க வேண்டும்.
அதன்படி, உலக எழுத்தறிவு தின வார நிகழ்வுகளை அனைத்து மையங்களிலும் சிறப்பாக நடத்திட வேண்டும். அந்நிகழ்வுகள் சார்ந்த ஆவணத் தொகுப்பை செப்டம்பர் 20-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் சுற்றறிக்கை வாயிலாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.