'3 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணியா? கட்டாய மாறுதல்!' – பள்ளிக்கல்வித் துறை அதிரடி!
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்கள் (ஆசிரியரல்லாப் பணியாளர்கள்) 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வை EMIS இணையதளம் வாயிலாக வெளிப்படையாக நடத்துவதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் இன்னசென்ட திவ்யா வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு ஆண்டுத்தோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான விதிமுறைகள் அரசு வெளியிட்டுள்ளது. மேலும், இவர்களுக்கான கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையில் பதவி உயர்வு உள்ளிட்டவற்றால் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு நிர்வாக மாறுதல் அளிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
3 ஆண்டுகள் மேல் பணிபுரிபவர்களுக்கு கட்டாய மாறுதல்
மேலும், அதில் ”ஒரே அலுவலகத்தில் அல்லது பள்ளியில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் பணியாளர்களான மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆய்வக உதவியாளர், பதிவுரு எழுத்தர் உள்ளிட்டோர் கட்டாய மாறுதலுக்கு உட்படுத்தப்படுவர்.
முதலில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் தொடக்கல்வி இயக்குனர் அலுவலகம் என பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் பணியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். அதனைத் தொடர்ந்து பிற மாவட்டங்களில் பணியிட மாற்றம் செய்யப்படும்.
புகார்கள் அல்லது முறைகேடுகளுக்கு எதிராக நிர்வாகக் காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டவர்கள், மீண்டும் அதே அலுவலகத்தைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் கலந்தாய்வு
குறிப்பாக அதில் இனி பொது மாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் வழியாக மட்டுமே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதில், “பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான (Non-Teaching Staff) பொது மாறுதல் கலந்தாய்வு இனி முழுமையாக கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதளம் மூலமாக மட்டுமே வெளிப்படையாக நடத்தப்படும்.
தற்போதைய பணியிடத்தில் குறைந்தபட்சம் ஓராண்டு பணி நிறைவு செய்த பணியாளர்கள் விருப்ப மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று தங்களுக்கு விருப்பமான இடங்களைத் தேர்வு செய்யலாம். அதில் முக்கியமாக மருத்துவக் காரணங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவன்-மனைவி பணி முன்னுரிமை போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்கு இதில் விதிவிலக்கு உண்டு.
கலந்தாய்வு நடத்தும் அதிகாரம்
பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநரக அளவிலான பணியிடங்களுக்கு சென்னையில் உள்ள இயக்குனர் அலுவலகத்தின் அதிகாரியும், வருவாய் மாவட்டத்திற்குள் உள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கான மாறுதல் கலந்தாய்வை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் நடத்துவர்.
கலந்தாய்வில் எவ்விதக் குளறுபடியும் ஏற்படாமல் இருக்க, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் (Sanctioned Posts) பணிபுரியும் அனைத்து அலுவலகப் பணியாளர்களின் விவரங்களும் கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் துல்லியமாகப் பதிவேற்றம் செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளன” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

