ரயில்வேயில் கைநிறைய சம்பளத்துடன் வேலை... மொத்தம் 22,195 காலிப் பணியிடங்கள்..!

 
1 1

இந்தியன் ரயில்வேயில் நிலை 1 கீழ்  மொத்தம் 22,195 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 

நாடு முழுவதும் இந்தியன் ரயில்வேயில் நிலை 1-ன் கீழ் மொத்தம் 22,195 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில்  தெற்கு ரயில்வேயில் மட்டும்  1,036  காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. எலெக்ட்ரிக்கல், எஸ், டி, டிராபிக், பொறியியல், மெக்கானிக்கல் ஆகிய துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது  முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 01.01.1993க்கு முன்பு பிறந்திருக்கக் கூடாது. வயது வரம்பில் தளர்வும் அளிக்கப்படுகிறது. அதாவது, ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 3 முதல் 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.  மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.  

கல்வித்தகுதியை பொறுத்தவரை, விண்ணப்பிப்பவர்கள் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ, டிகிரி தகுதி இந்த பணியிடங்களுக்கு தகுதியாக ஏற்கப்படாது என கூறப்பட்டுள்ளது. இந்தியன் ரயில்வேயில் நிலை 1-ன் கீழ் மாத சம்பளமாக ரூ.18,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணியிடங்களுக்கு கணினி வழித்தேர்வு, உடற்தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவத் தகுதி ஆகியவை அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதில் கணினி வழித்தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதல் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில், அடுத்தடுத்து தேர்வுக்கு செல்ல முடியும்.

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணியிடங்களுக்கு rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். இதில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பழங்குடி, பட்டியலின,  திருநங்கைகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் தேர்வு கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க  மார்ச் 2ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும், விண்ணப்ப கட்டணம் செலுத்த மார்ச் 3ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள மார்ச் 5ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.