விபத்தைத் தடுக்க முயன்ற போது இரு லாரிகளுக்கு இடையே சிக்கி உடல் நசுங்கி தொழிலாளி பலி..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி - தேவிகாபுரம் நெடுஞ்சாலையில் உள்ள அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று நேரிட்ட கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தச்சூர் மோட்டு குடிசை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சிவலிங்கம் (65), வழக்கம்போல பணியில் இருந்தபோது, குடோனுக்கு வந்திருந்த லாரிகளில் இருந்து அட்டைப்பெட்டிகளை இறக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது ஒரு லாரியின் ஓட்டுநர் என்ஜினை அணைக்காமல் கீழே இறங்கிய நிலையில், அந்த வாகனம் திடீரெனத் தானாக முன்னோக்கி நகரத் தொடங்கியது.
கட்டுப்பாடின்றி நகர்ந்த லாரியை நிறுத்த முயன்ற சிவலிங்கம் மற்றும் சக தொழிலாளர்கள் இருவர், லாரியின் முன்பகுதியைத் தள்ளிக் கட்டுப்படுத்த முயன்றனர். லாரி வேகம் எடுத்ததைக் கண்டு மற்ற இரு தொழிலாளர்கள் விலகிக்கொண்ட நிலையில், சிவலிங்கம் மட்டும் எப்படியாவது விபத்தைத் தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கில் லாரியைத் தள்ளிக்கொண்டே பின்னோக்கிச் சென்றார். துரதிர்ஷ்டவசமாக, பின்னால் நின்றிருந்த மற்றொரு லாரிக்கும், நகர்ந்து வந்த லாரிக்கும் இடையே சிக்கி உடல் நசுங்கிய சிவலிங்கம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து ஆரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, என்ஜினை அணைக்காமல் அஜாக்கிரதையாக வாகனத்தை விட்டு இறங்கிய லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த சிவலிங்கத்திற்கு மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். ஒரு விபத்தைத் தடுக்க முயன்று தனது உயிரையே இழந்த அந்தத் தொழிலாளியின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


