‘எப்படியாவது கூட்டணியில் பிளவு ஏற்பட்டுவிடாதா? என சிலர் நினைக்கிறார்கள்.. ஆனால்..!’ - திருமாவளவன்..
எப்படியாவது கூட்டணியில் பிளவு ஏற்பட்டுவிடாதா? என சிலர் நினைக்கிறார்கள்.. ஆனால் தற்போது வரையில் திமுக கூட்டணியில் தான் விசிக உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அடுத்த மாதம் அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருவாரூரில் மகளிர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., “மதுவினால் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலுமே லட்சக்கணக்கான பெண்கள் விதவைகள் ஆகும் நிலை இருந்து வருகிறது. தமிழகத்தில் மதுவை ஒழித்தால் அண்டை மாநிலங்களான பாண்டிச்சேரி மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் மது விற்பனை நடைபெறும். எனவே தமிழகத்தில் படிப்படியாகவும் இந்திய அளவில் மதுவினை முழுமையாகவும் தடை செய்வதற்கு தேசிய அளவில் கொள்கை ஒன்றினை நாட்டை ஆண்டு வரும் பிஜேபி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் மகளிர் மாநாடு நடைபெறுகிறது.
டாஸ்மாக்கை மூடுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதன் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருவதால் படிப்படியாக குறைத்திட வேண்டும்.மேலும் தேசிய அளவில் மது ஒழிப்பு செய்வதற்கு ஆளும் பிஜேபி சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதுடன் இதற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வலியுறுத்த வேண்டும்.. மதுவை ஒழிக்க வேண்டும் என தூய்மையான நோக்கத்தோடு தான் இந்த மகளிர் மாநாடு நடத்தப்படுகிறது.
இதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த பாதிப்பு வந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு தயாராக இருந்து வருகிறோம். கூட்டணியில் பிரச்சனை வரலாம் என சிலர் நினைத்து வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரையில் தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி பற்றி முடிவு செய்யும். விடுதலை சிறுத்தைகள் இயக்கம் என்பது துவங்கப்பட்டு 11 ஆண்டுகளுக்கு பின்னர் தான் தேர்தல் அரசியலில் ஈடுபட துவங்கியது. ஆனால் சிலர் தற்போது கட்சி துவங்குவதற்கு முன்னதாகவே பதவிக்கு வர வேண்டும் என்ற ஆசையுடன் கட்சியை துவங்குகின்றனர்.
ஆட்சியிலும், அரசியலிலும் பங்கு என்பது கடந்த 1999 ம் ஆண்டில் மறைமலை நகரில் நடந்த கூட்டத்தில் நான் பேசியதாகும். அதனை என்னுடைய எக்ஸ் தளத்தில் முதலில் ஒரு அட்மின் பதிவிடவும், பின்னராக டெலிட் செய்யப்படவே ஏதோ காரணத்தால் டெலிட் ஆகிவிட்டது என மற்றொரு அட்மின் அதனை மீண்டும் பதிவிட்டுள்ளார். இது மட்டுமே உண்மை சம்பவம். ஆனால் ஆட்சியிலும், அரசியலிலும் பங்கு என்ற முழக்கத்தை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக எங்களை மிரட்டியதாகவும், இதன் காரணமாகவே போடப்பட்ட பதிவு டெலிட் செய்யப்பட்டதாகவும் கூறுவது கட்டுக்கதையாகும். எப்படியாவது இந்த கூட்டணியில் பிளவு ஏற்படுமா? ஏற்பட வேண்டும் என சிலர் நினைத்து வருகின்றனர். தற்போது வரையில் திமுக கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது என அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.