பெண்கள் 50% மானியத்தில் 5 ஏக்கர் நிலம் வாங்கலாம்! விண்ணப்பிப்பது எப்படி..?
நன்னிலம் திட்டம் என்றால் என்ன?, இத்திட்டத்தில் பெண்கள் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?, எவ்வளவு நிலம் வாங்கலாம்?, நன்னிலம் திட்டம் விதிமுறைகள் என்ன? என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் விவசாயக் கூலிகளாகப் பணியாற்றும் பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்கில், தமிழ்நாடு அரசு 'நன்னிலம்' (Nannilam Scheme) திட்டத்தின் கீழ் அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினப் பெண்கள் சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்ய அரசே நிதியுதவி வழங்குகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்குத் தமிழ்நாடு அரசு தாட்கோ (TAHDCO) நிறுவனம் மூலம் பின்வரும் உதவிகளை வழங்குகிறது:
- அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்க வழிவகை செய்யப்படுகிறது.
- நிலத்தின் திட்ட மதிப்பீட்டில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை அரசு மானியமாக வழங்குகிறது.
- நிலம் வாங்குவது மட்டுமின்றி, அந்த நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்தல், பம்ப் செட் பொருத்துதல் மற்றும் சொட்டுநீர் பாசன வசதிகளை ஏற்படுத்தவும் இந்த மானியம் பொருந்தும்.
- இத்திட்டத்தில் நிலம் வாங்கும்போது 100% முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இது பயனாளிகளுக்குப் பெரும் நிதியாதாரத்தைச் சேமிக்க உதவும்.
- விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெறத் தேவையான ரூ. 75,000 வைப்புத் தொகையை தாட்கோ நிறுவனமே நேரடியாக மின்சார வாரியத்தில் செலுத்தி, விரைந்து மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்யும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் (SC) அல்லது பழங்குடியின (ST) சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- நிலமற்ற பெண் விவசாயக் கூலிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குடும்பத்தில் பெண் இல்லை என்றால், கணவர் அல்லது மகன் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- குடும்பத்தின் ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
நன்னிலம் திட்டம் விதிமுறை:
இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலத்தை, வாங்கிய தேதியிலிருந்து 20 ஆண்டுகளுக்கு விற்கக்கூடாது என்பது மிக முக்கியமான நிபந்தனையாகும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுள்ள பயனாளிகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டு முறைகளிலும் விண்ணப்பிக்கலாம்:
- உங்கள் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது தாட்கோ (TAHDCO) அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
- தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tahdco.com/ மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.
- அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களுக்குச் சென்றும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
நன்னிலம் திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்
இத்திட்டத்தின் கீழ் 50% மானியம் பெற, பின்வரும் ஆவணங்களின் நகல்களைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்:
விண்ணப்பதாரரின் புகைப்படம், ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதற்கான சாதிச் சான்றிதழ், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் இருப்பதை உறுதி செய்ய வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட வருமானச் சான்றிதழ், தமிழ்நாட்டில் வசிப்பதற்கான இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, நிலமற்றவர் என்பதற்கான சான்றிதழ், அதாவது விண்ணப்பதாரர் அல்லது அவரது குடும்பத்தினர் பெயரில் விவசாய நிலம் இல்லை என்பதற்கான சான்று கிராம நிர்வாக அலுவலரிடம் பெறலாம்.
மேலும், நீங்கள் வாங்க விரும்பும் நிலத்தின் கிரயப் பத்திரம், பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் வில்லங்கச் சான்றிதழ் (EC), மானியத் தொகை மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்காக வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் உள்ளிட்ட ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
- விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு, தாட்கோ (TAHDCO) அதிகாரிகள் விண்ணப்பங்களைச் சரிபார்த்து தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைப்பார்கள்.
- நீங்கள் வாங்க உத்தேசித்துள்ள நிலத்தின் சந்தை மதிப்பை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.
- நிலம் வாங்குவதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன், அரசின் 50% மானியத் தொகை (அதிகபட்சம் ரூ. 5 லட்சம்) நேரடியாக நில விற்பனையாளரின் வங்கி கணக்கிற்கோ அல்லது திட்ட விதிகளின் படியோ செலுத்தப்படும்.
கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்
- நீங்கள் நிலம் வாங்கும் விற்பனையாளர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்.
- நிலம் வாங்கிய பிறகு அதில் விவசாயம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். சொட்டுநீர் பாசனம் மற்றும் கிணறு அமைக்கவும் அரசு கூடுதல் ஆர்வம் காட்டுகிறது.


