பேருந்து நிலையத்தில் அட்ராசிட்டி செய்து காவலர்களிடமும் தகாத வார்த்தை பேசி வம்பு இழுத்த பெண்கள் கைது

 
s

தருமபுரி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் காவலர்களிடம் வம்பு இழுத்த சென்னையைச் சேர்ந்த இளம் பெண்களை தருமபுரி நகர காவல் துறையினர் கைது செய்தனர்.


தருமபுரி பேருந்து நிலையத்திற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பேருந்துக்காக வந்த இளம் பெண்கள் இருவர் பொதுமக்களிடம் வம்பு இழுத்துள்ளனர். இதனை அடுத்து ரோந்து பணியில் இருந்த காவலர்கள் பேருந்து நிலையத்திற்கு வந்த பொழுது, பொதுமக்கள் காவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். அப்பொழுது காவலர்களை நோக்கி வந்த அந்த இரண்டு இளம் பெண்களும் காவலர்களிடமும் வம்பு இழுத்தனர். சென்னை சேர்ந்தவர்கள் என்றும்,  உங்களால் என்ன செய்ய முடியும் என தேவையில்லாமல், சென்னை தமிழில் பேசியும், காவலர்கள் மற்றும் ஒரு ஆணிடம்  தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயற்சித்துள்ளனர். பொதுமக்களிடமும் காவலர்களிடம் அந்த இரண்டு இளம் பெண்களும் நடந்து கொண்ட விதம்,  பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கும் வகையில் இருந்தது. 

இதனையத்து தருமபுரி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இந்த இரண்டு பெண்களையும் தர்மபுரி பென்னாகரம் மேம்பாலம் அருகே கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்து விசாரித்த பொழுது சென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யா, கண்மணி என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் சென்னை கோவை இன்னும் பல நகரத்தில் அழகு நிலையத்தில் பணிபுரிந்துள்ளனர். மேலும் பணி நிமித்தமாக தருமபுரிக்கு வந்த பொழுது பேருந்து நிலையத்தில் இது போன்று நடந்து கொண்டதால், இரண்டு பெண்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.