வேலையை விட்டு நிறுத்தியதால் அலுவலகத்திலேயே பெட்ரோல் ஊற்றி பெண் தீக்குளிப்பு!

 
ச்

சென்னையில் வேலையை விட்டு நிறுத்தியதால் அலுவலகத்திலேயே இளம்பெண் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் சுமதி( வயது 38). இவரது கணவர் பால்ராஜ் . கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். கூலி வேலைக்கு சென்று இருவரையும் சுமதி தான் காப்பாற்றி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகளுக்கு திருமணம் நடந்துள்ளது. மகன் மாதவரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் படித்து வருகிறார்.


இந்த நிலையில் தேனாம்பேட்டையில் உள்ள ( அவுட்சோர்சிங் முறையில்) ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 10 மாதங்களாக ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்தார். ஹவுஸ் கீப்பிங் பணிக்கு ஆண் பணியாளர்கள் தான் தேவைப்படுகிறார்கள். எனவே ஏழாம் தேதி (இன்று) வந்து உங்கள் சம்பளத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறி வேலையை விட்டு நிறுத்தியதாக தெரியவருகிறது. இந்த நிலையில் நேற்று(6ம் தேதி) சுமதி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். தனது சம்பளத்தை உடனே தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் நாளை(7ம் தேதி ) சம்பளம் வந்து விடும் என கூறி அனுப்பி வைத்துள்ளனர். அந்த நிறுவனத்தை விட்டு வெளியே சென்ற சுமதி சிறிது நேரம் கழித்து மீண்டும் அலுவலகத்துக்கு வந்தார்.

ச்


கேனில் தான் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டு அலறி துடித்தார். பலத்த தீக்காயம் அடைந்த அவரை, நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 62% தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் எழும்பூர் நீதிமன்ற 14வது நீதிபதி தயாளன், சுமதியிடம் மரண வாக்குமூலம் பெற்றுள்ளார். இந்த தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் நிறுவனத்தில் பணியாற்றும் HR ( மனிதவள மேலாளர்), சுமதி வேலை செய்வதை அடிக்கடி குறை கூறியபடியே இருந்துள்ளார் என்பது தெரியவருகிறது. அவர் கூறியதன் பேரிலேயே சுமதியை நீக்கிவிட்டு, ஆண் பணியாளரை ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு நியமிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த சுமதி விபரீத முடிவு எடுத்துள்ளார் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த நிறுவனத்தின் பெண் மனித வள அதிகாரியிடமும் விசாரணை நடைபெறுகிறது.