விஜய் செலுத்திய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி அனுப்பிய பெண்..!

 
1 1

கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களில் ஒருவராக கோடங்கிபட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவியான சங்கவி, விஜய் அளித்த ரூ. 20 லட்சத்தை திருப்பி அனுப்பியதாக அறிவித்துள்ளார். 


கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்தது. இந்த துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.சம்பவம் குறித்து விஜய் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்ததுடன், பலியான 41 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க முடிவு செய்தார். இந்த தொகை நேரடியாக வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டது.மேலும், அவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வந்து, தனிப்பட்ட முறையில் ஆறுதல் கூறினார். 

ஆனால், இந்த ஆறுதல் நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களில் ஒருவராக கோடங்கிபட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அடையாளம் காணப்பட்டார். அவருடைய மனைவி சங்கவி. விஜய் வழங்கிய ரூ.20 லட்சம் நிதி சங்கவியின் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது. ஆனால், ஆறுதல் நிகழ்ச்சிக்கு சங்கவி அல்லாமல், அவருடைய உறவினர் ஒருவர் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்பது தற்போது பெரும் விவாதமாகியுள்ளது.

இது தொடர்பாக அவர் கூறியதாவது; கரூர் நெரிசலில் என் கணவன் ரமேஷ் உயிரிழந்தார். விஜய் நேரில் வந்து ஆறுதல் தெரிவிக்கவில்லை என்பதால் பணத்தை திருப்பி அளித்ததாகவும், பணம் வேண்டாம் ஆறுதல் மட்டுமே வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், தனக்கு தெரியாமல் தனது உறவினர்களை தவெக நிர்வாகிகள் அழைத்து சென்று இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட சங்கவி என்ற பெண் கூறினார்.

எனக்குப் பதிலாக என் உறவினரை சென்னைக்கு அழைத்துச் சென்று விஜய் சந்தித்தது தவறு. நான் நேராக விஜயிடம் என் துயரத்தை பகிர்ந்திருக்க விரும்பினேன்,” என சங்கவி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, என்னைப் புறக்கணித்தது எனக்கு வேதனை அளிக்கிறது. அதனால் விஜய் வழங்கிய ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பிவிட்டேன். பணம் எனக்கு முக்கியமல்ல; மரியாதை தான் முக்கியம்,” என சங்கவி உணர்ச்சி வசப்பட்டு தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் இதுவரை தவெக அல்லது விஜய் சார்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. இருப்பினும், சங்கவியின் குற்றச்சாட்டு மற்றும் பணத்தை திருப்பி அனுப்பிய தகவல் வெளிவந்ததால், தவெக நிர்வாகம் இதுகுறித்து விரைவில் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.