சிறுத்தை தாக்கி பெண் பலி! வேலூரில் சோகம்

 
ச்

வேலூர் மாவட்டம் துருவம் கொள்ளை மேடு பகுதியை சேர்ந்த பெண் அஞ்சலி (22) வீட்டின் அருகே சிறுத்தை தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கே வி குப்பம் அடுத்த மேல்மாயில், துருவம் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகள் அஞ்சலி (வயது 20). இவர்  பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். சிவலிங்கத்தின் துருவம் கிராமம் காப்பு காட்டை  ஒட்டி உள்ளதால் அவ்வப்போது வனவிலங்குகள் வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று சுமார் 3 மணியளவில் சிவலிங்கத்தின் மகள் அஞ்சலி வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தபோது காப்புக்காட்டில் இருந்து வந்த சிறுத்தை அஞ்சலியை தாக்கி காப்புக்காட்டிற்குள்  இழுத்துச் சென்றுள்ளது. 


அஞ்சலியின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்த உறவினர்கள் அஞ்சலியை சிறுத்தை கடித்து இழுத்து செல்வதை கண்டு கூச்சலிட்டு சிறுத்தையை விரட்ட முயற்சி செய்துள்ளனர். அப்போது பொதுமக்களைக் கண்ட அந்த சிறுத்தை அஞ்சலியை வீட்டின் அருகே உள்ள காப்புக்காட்டில் விட்டு தப்பி ஓடியது. உடனடியாக உறவினர்கள் அஞ்சலியை அருகே சென்று பார்த்தபோது கை கால்கள் பல இடங்களில் சிறுத்தை கடித்ததில் அஞ்சலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். உடனடியாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த குடியாத்தம் வனத்துறையினர் மற்றும் கே. வி.குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவல் அறிந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுபலட்சுமி மற்றும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கேவி குப்பம் வட்டாட்சியர் சந்தோஷ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிராமத்திற்குள் வந்து சிறுத்தை பெண்ணை தாக்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிறுத்தை

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில், துருவம் கிராமத்தில் சிறுத்தை கடித்து பெண் பலியான சோக சம்பவம் நடந்தது. அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம், மக்கள் அச்சபடவேண்டாம் என கூறியுள்ளோம். தொடர்ந்து இங்கே மாவட்ட வன அலுவலர் மற்றும் வனதுறை பணியாளர்கள் கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், மக்கள் பயப்பட வேண்டாம்” எனக் கூறினார்