ஈசிஆர் கடற்கரையில் சோகம்: ராட்சத அலையில் சிக்கி ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு..!
சென்னையில் உள்ள 'பிரபவ' (Prabhava) என்ற தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 30 பேர் கொண்ட குழுவினர், பொழுதுபோக்கிற்காகக் கானத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட முத்தண்டி நயினார் குப்பம் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அங்கு அனைவரும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு சிலர் கடலில் இறங்கிக் குளித்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக எழுந்த ராட்சத அலையில் சிக்கி, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஜெய் (25) மற்றும் மயூரி (25) ஆகிய இருவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள், உடனடியாக இருவரையும் மீட்க முயன்றனர்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மயூரி மீட்கப்பட்டார். ஆனால், சுயநினைவின்றி இருந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மயூரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அலையில் அடித்துச் செல்லப்பட்ட ஜெய் என்பவர் இதுவரை மீட்கப்படவில்லை. அவரைத் தேடும் பணியில் கானத்தூர் காவல்துறையினர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடற்கரையோரம் உள்ள குடியிருப்புகளுக்கும் இது குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கிற்காகச் சென்ற இடத்தில் இரு இளம் ஐடி ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் சக நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துக் கானத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

