100 நாள் வேலைக்கு செல்லும் பெண்ணுக்கு ரூ.1.67 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்..!

 
1 1

குடியாத்தம் வெள்ளேரி கிராமத்தில் வசித்து வருபவர் கவிதா. இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (MGNREGS) வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.1.67 கோடி ஜிஎஸ்டி நிலுவையில் உள்ளதாகவும், அதை உடனே கட்டக்கோரியும் கவிதாவுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் வந்தது.அந்த ஜிஎஸ்டி நோட்டீசில் கவிதா சென்னையை தளமாகக் கொண்ட தர்ஷினி இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

கூலித் தொழிலாளியான கவிதா ரூ.1.67 கோடி ஜிஎஸ்டி நோட்டீசை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். தனக்கு தவறாக ஜிஎஸ்டி நோட்டீஸ் விதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''2020ஆம் ஆண்டு கொரொனா ஊரடங்கு காலத்தில் என் மகன் என் மொபைல் போனில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொன்டிருந்தான். அப்போது அவன் பான் எண்ணை கேட்டபோது நான் கொடுத்தேன். ஆகவே எனது பான் எண்ணை போலியாக ஜிஎஸ்டி பதிவுக்கு பயன்படுத்தி இருக்கலாம் என கருதுகிறேன்'' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ''தர்ஷினி இண்டஸ்ட்ரீஸ் என்ற எந்த நிறுவனத்துடனும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. நான் ஒரு சாதாரண கூலித்தொழிலாளி. இது மிகப்பெரிய மோசடி'' என்று தெரிவித்து இருந்தார். போலீஸ் விசாரணையில் கவிதாவின் பான் எண்ணை வைத்து மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது கவிதாவின் பான் கார்டு எண்ணை வைத்து நிறுவனம் ஒன்றை பதிவு செய்துள்ளனர். 

மேலும் விசாரணையில் மோசடியில் ஈடுபட்டது சென்னை வில்லிவாக்கத்தை மையமாக கொண்ட வர்த்தக நிறுவனமான தர்ஷினி இண்டஸ்ட்ரீஸ் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிறுவனம் ரூ.55.58 லட்சம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் அதை செலுத்த தவறியதால், ரூ.1.12 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் செலுத்த வேண்டிய மொத்தத் தொகை ரூ.1.67 கோடியாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.