மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் பெண் அழுகிய நிலையில் மீட்பு..!!

 
Q

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையை சேர்ந்த விஜயா (55) என்பவரை காணவில்லை என அவரது மகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில் பாழடைந்த அறைக்குள் இயற்கை உபாதை கழிக்க சென்ற அவர், அங்கிருந்த துவாரம் வழியே கீழே விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. விபத்து நடந்து 4 நாட்களுக்கு பிறகு கீழ் தளத்தில் உள்ள அந்த அறையிலிருந்து அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் விஜயா (வயது 55). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது இயற்கை உபாதை கழிக்க, ரெயில் நிலைய வளாகத்தில் பராமரிப்பின்றி பாழடைந்து கிடந்த அறைப் பகுதிக்கு அவர் சென்றுள்ளார். அங்கு தரைப்பகுதியில் இருந்த திறந்தவெளிப் பகுதி முறையாக மூடப்படாமல் இருந்ததால், எதிர்பாராதவிதமாக விஜயா நிலைதடுமாறி அந்த துவாரத்தின் வழியே கீழ் தளத்திற்குள் விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விஜயா வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது மகள், தனது தாயாரைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) மயிலாப்பூர் ரெயில் நிலையத்தின் கீழ் தளத்தில் உள்ள ஒரு பாழடைந்த மூடிய அறையிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, காணாமல் போன விஜயா சடலமாக அழுகிய நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த ரெயில்வே போலீசார் விஜயாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலைய வளாகத்தில் பாதுகாப்பு குறைபாடுகளுடன் திறந்திருந்த அந்த பகுதி ஏன் மூடப்படவில்லை என்பது குறித்தும், இந்த மரணத்தில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பயணிகள் நடமாட்டம் உள்ள முக்கிய ரெயில் நிலையத்தில், பாதுகாப்பு இல்லாத துவாரத்தில் விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சென்னையில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.