அரசு மருத்துவமனை கழிவறையில் வழுக்கி விழுந்து பெண் உயிரிழப்பு! பிரசவத்துக்கு வந்த 10வது நாள் சோகம்

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கழிவறையில் வழுக்கி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி எலிசபெத் ராணி. நிறை மாத கர்ப்பிணியான எலிசபெத் ராணி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்காக 26ஆம் தேதி சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 27 ஆம் தேதி சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவில் கழிப்பறைக்குச் சென்ற போது வழுக்கி கீழே விழுந்துள்ளார். இதில் மயக்கம் அடைந்து சுயநினைவு இல்லாமல் கிடந்ததைக் கண்டு அவரது தாய் ஜெயாவதி ஓடோடி சென்று அங்கிருந்த மற்றவர்கள் உதவியுடன் அவரை மீட்டு உள்ளார். பின்னர் எலிசபெத் ராணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் எலிசபெத் ராணி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த எலிசபெத் ராணியின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த 10வது நாளில் தாய் கழிப்பறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.