குடிமகன்களுக்கு பேரிடி! ஆகஸ்ட் 4 முதல் டாஸ்மாக் கடைகள் அடைப்பு..!

 
tasmac

சேலத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கோவை, சேலம், திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட ஐந்து மண்டலங்களில் உள்ள நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாரதி, “தமிழக அரசு 2500-க்கும் மேற்பட்ட அரசு டாஸ்மாக் கடைகளை தனியாருக்கு கொடுப்பது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது.

23 ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத அரசாக தற்போதைய அரசு உள்ளது. போதையில்லா தமிழகத்தை தமிழக வெற்றிக் கழக அரசு கொண்டு வராது. ஆனால் டாஸ்மாக் பார்களை தான் தனியாருக்கு கொடுக்கவுள்ளது.

அதனால் மட்டுமே போதையில்லா தமிழகத்தை உருவாக்கி விட முடியாது. 23 ஆண்டுகளாக பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும். சென்ற ஆண்டு மட்டும் 48 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை தமிழக அரசுக்கு கொடுத்த டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு 150 கோடி ரூபாய் வருமானம் ஈட்டித் தரும் டாஸ்மாக் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மறுக்கும் பட்சத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

குறிப்பாக, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் ஆகிய மண்டலங்களில் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும்.வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள ஐந்து மண்டலங்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.

தனியார் முதலாளிகளுக்கு லாபம் ஈட்டும் வகையில் அரசு திட்டங்களை செயல்படுத்துகிறது. உடனடியாக அரசு மதுபானக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களை பாதுகாக்க வேண்டும். தனியார்மயத்தை தடுக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி கொடுத்து அவர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியம் உள்ளிட்ட பண பலன்களை வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.